Cricket news in tamil: ரிஷாப் பந்த் நல்ல உடற்தகுதியுடன் உள்ளதாகவும், அவரது பேட்டிங் டெக்னீக்கை மேம்மபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் சரந்தீப் சிங், ‘ரிஷாப் பந்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாட முடியும், விருத்திமான் சஹாவால் அது முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பந்த், ஆஸ்திரேலியாவில் நடந்த 20 போட்டியில் விளையாடுவதற்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் பந்த் தொடரிலாவது தேர்வு செய்யப்படுவாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, டெஸ்ட் போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படு தோல்வியை சந்திக்கவே, ரிஷாப் பந்த்தை கட்டாயம் அணியில் சேர்க்க வேண்டும் என அணி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே பந்த் சிட்னியில் நடந்த 2 வது போட்டியில் களமிறங்கப்பட்டர். அந்த போட்டியில் அதிரடி காட்டிய பந்த் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தொடர்ந்து அங்கு நடந்த மற்ற 2 போட்டிகளிலும் களம் கண்ட பந்த், இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த முக்கிய வீரர்களுள் ஒருவரானார்.
அதே பார்மை சொந்த மண்ணில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்த பந்த், அகமதாபாத்தில் நடந்த 4வது போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி, இந்திய அணி தொடரை கைப்பற்ற செய்தார். தொடர்ந்து அந்த அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் சிறப்பாக விளையாடியும் இருந்தார். இதனால் கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ள பந்த், இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய வீரர் ரிஷப் பந்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதுமானதாக இருக்காது. முன்னர் அவருக்கு உடற்தகுதியில் சில பிரச்சினைகள் இருந்தன. அதில் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்ட அவர், எந்த மாதிரியான ஷாட்களை தேர்வு செய்து விளையாட வேண்டும் என்றும் கவனம் செலுத்தினார்.
21 வயதான ஒரு இளம் வீரர் 30 வயதுடைய வீரரை போல விளையாடுவது, கொஞ்சம் கடினமான செயல். இப்போது ஹார்டிக் பாண்ட்யா நல்ல அனுபவத்துடன் பேட் செய்து வருகிறார். அதே நேரத்தில் கடந்த ஆறு மாதங்களாக பந்தின் பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பந்த் சில தொடரிகளில் விளையாட தேர்வு செய்யப்படவில்லை. அது அவருக்கு நன்மையைத் தான் ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் ஆடிய விதம், ஒரு நல்ல அனுபவம் உள்ள வீரராக மாற்றியுள்ளார் என்பதை காண்பிக்கிறது. மேலும் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாட முடியும். ஆனால் விருத்திமான் சஹாவால் அது முடியாது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் தோள்பட்டை காயம் ஏற்பட்ட்டதால் ஸ்ரேயஸ் அய்யர் அணியில் விலகினார். அவருக்கு பதில் பந்த் விளையாடினார். அவர் அணிக்கு திரும்பும்போது கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்பார். ஏனென்றால் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை திறம்பட செய்து வருகிறார்” என்று முன்னாள் இந்திய வீரரும், தேர்வாளருமான சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )