Yuvraj Singh Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் (39). கடந்த 2003ம் ஆண்டு இந்திய அணியில் அடி வைத்த இவர் பல சர்வதேச போட்டிகளில் திருப்பு முனையை ஏற்படுத்தி வீரர் என்ற பெருமை பெற்றவர். தனது அசாத்திய அதிரடியால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்.

இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ், ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இவரின் சில சாதனைகள் இன்றுவரை எந்த இந்திய வீரராலும் முறியடிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

சக வீரர்களாலும், ரசிகர்களாலும் என யுவி செல்லமாக அழைக்கப்படும் யுவராஜ் சிங் கடந்த 2011ம் நடந்த 50ஓவர் உலககோப்பை தொடரின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த அவர் சரியான பார்மில் இல்லை என அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் யுவராஜ் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பதாக யுவராஜ் சிங் அதிர்ச்சி கலந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த அறிவிப்பில், ‘உங்கள் தலைவிதியை கடவுள் தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி மாதம் கிரிக்கெட் களத்தில் மீண்டும் இறங்குவேன் என நம்புகிறேன். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு முக்கியம். தொடர்ந்து ஆதரவளியுங்கள். கடினமான நேரங்களில் ரசிகர்கள் எனக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் இந்தியாவுக்காக விளையாடுவாரா அல்லது டி 20 லீக்குகளுக்கு திரும்புவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கிரிக்கெட் ஆடுகளத்தில் நட்சத்திர பேட்ஸ்மேனை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“