Kerala Cricket Association | Thiruvananthapuram Tamil News: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த ஆட்டம் நடந்த கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் 42,000 பார்வையாளர்கள் அமரலாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது 10,000 க்கும் குறைவான பார்வையாளர்களே வருகை தந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் தெரிவித்த கருத்துக்கள் தான்.

போட்டி டிக்கெட் விற்பனை குறித்து ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்ரகிமான், “வரியை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் விலைவாசி உயர்வு காணப்படுவதால் வரியை குறைக்க வேண்டும் என்பதே கோரிக்கை. பட்டினியால் வாடுபவர்கள் சென்று போட்டியைப் பார்க்க தேவையில்லை.” என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேளிக்கை வரி உண்மையில் அதிக விகிதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியது.
இருப்பினும், அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்த இந்த கருத்துக்கள் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் குறைவான அளவில் ரசிகர்கள் வர காரணமாக இருக்கலாம் என்று கேரள மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கேரள கிரிக்கெட் சங்க அதிகாரிகள், போட்டிக்கான 7,201 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டன. 42,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் 20,000க்கும் குறைவானவர்களே போட்டியைக் கண்டுகளித்தனர். இதுவரை இந்த ஸ்டேடியத்தில் நடந்த அனைத்து சர்வதேச போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன” என்று கூறினர்.
கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மக்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகை, மகரவிளக்கு, சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் அனைத்தும் இதற்குக் காரணம்.
கேரள கிரிக்கெட் சங்கம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் போட்டிகளை எவ்வாறு நடத்துகிறது என்பதை உண்மையில் புரிந்துகொள்ளாமல் அமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார். குறைந்த அளவிலான பார்வையாளர்கள் வருகை என்பது உலகக் கோப்பை போட்டியை நடத்தும் எங்களது நம்பிக்கைக்கு பின்னடைவாக உள்ளது. மற்ற மாநில சங்கங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலகக் கோப்பைக்கான இடத்தைப் பெறுவதற்கு உரிமை கோரலாம்.” என்று கூறியுள்ளார்.
“ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் கட்டணங்கள் ரூ.1,300 மற்றும் ரூ.2,600, இதில் 12 சதவீத கேளிக்கை வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடங்கும். இந்த விகிதங்கள் உண்மையில், கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிக்கான கட்டணத்தை விட குறைவாகும். அப்போது 5 சதவீதம் மட்டுமே கேளிக்கை வரி விதிக்கப்பட்டாலும், வரி, ஜிஎஸ்டி சேர்த்து ரூ.1,500, ரூ.2,750, ரூ.6,000 என டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.” என்று கேரள கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக ஒரு கருத்து உருவாக்கப்பட்டுள்ளது, அது உண்மையல்ல. உண்மையில், கடந்த முறை டி20 போட்டிக்கான கட்டணங்கள் அதிகமாக இருந்தபோது, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த தொடரில் கூட, கவுகாத்தியில், 6,000 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. கொல்கத்தாவில் மலிவான விலையில் டிக்கெட்டுகள் இருந்தன, ஆனால் பெங்கால் கிரிக்கெட் சங்கம் அதைச் செய்ய முடியும், ஏனெனில் அங்கு வழக்கமான சர்வதேச மற்றும் ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை நடத்தும் அனுமதியைப் பெறுகிறது.” என்று கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் வினோத் குமார் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், “கேரள விளையாட்டு அமைச்சரின் உணர்ச்சியற்ற கருத்துக்களால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக ஊடகப் புறக்கணிப்பின் விளைவாக, இந்தியா-இலங்கை மூன்றாவது ஒருநாள் போட்டியின் மோசமான வருகைக்கு வருத்தம் தெரிவிக்கும் எனது அறிக்கையை சிலர் தவறாகப் பரப்பியதாகத் தெரிகிறது.
புறக்கணிப்பு என்பது ஜனநாயக உரிமை, ஆனால் புறக்கணிப்பவர்கள் யாருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்களோ அவர்களையே குறிவைக்க வேண்டும். டிக்கெட் வாங்க முடியாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்ற அமைச்சரின் அடாவடித்தனமான கருத்துக்கு ஆத்திரமடைந்தவர்களுக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை.” என்று பதிவிட்டு இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“