Joe root Tamil News: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 2ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது டெஸ்டில் களமாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓவல் மைதானத்தில் அவரது சுழலில் எப்போதும் போல மிரட்டுவார் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று அளித்த பேட்டியில், இந்திய வீரர் அஸ்வினை சமாளிக்க தங்கள் அணியினர் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கேப்டன் கோலிக்கு நெருக்கடி கொடுத்து அவரது விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டி பேசிய அவர், “இந்திய கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் அவரை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்த எல்லாம் பெருமையும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும். இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அடுத்து வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர் நெருக்கடி கொடுத்து சீக்கிரம் வீழ்த்துவோம். அப்போது தான் இந்த தொடரை நங்கள் வெல்ல முடியும்.” என்றார்.

தொடர்ந்து இந்திய வீரர் அஸ்வின் குறித்து அவர் பேசுகையில், “அஸ்வின் மிகச் சிறந்த வாய்ந்த வீரர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் சேர்த்துள்ளர். டெஸ்ட் அரங்கில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மேலும், அவரால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும். எனவே அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil