Cricket news tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்றும், டி-20 தொடரில் 3-2 என்றும் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
விறுவிறுப்பாக நடந்த நேற்றைய ஆட்டத்தில், சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷார்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவர் வீசிய 47 வது ஓவரில் 18 ரன்களை வழங்கி இருந்தார். எனவே 83 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து, அதிரடி காட்டிய இங்கிலாந்தின் சாம் கரனுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், இந்த தொடரில் துல்லியமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய (22.50 சராசரி), புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. மாறாக, இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து 219 ரன்கள் சேர்த்த இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இது குறித்து போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் புவனேஷ்வர் குமாருக்கு தொடரின் நாயகன் விருது கிடைக்கவில்லை. இந்த இரு வீரர்களும் பாதகமான சூழ்நிலைகளில் சிறப்பாக பந்து வீசினார்கள்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹார்டிக் பாண்ட்யா மற்றும் நடராஜன் அந்த அணியின் வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். மேலும் இந்த தொடரில் அறிமுகமாகி அசத்திய பிரசித் கிருஷ்ணா, மற்றும் க்குருனல் பாண்ட்யா, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளனர்" என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )