sanjiv goenka Tamil News: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரபலமான ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் உருவெடுத்துள்ளது. 2021ம் ஆண்டுடன் 14 சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த தொடர் தற்போது அடுத்தாண்டுக்கான ( 2022) பணிகளை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2 புதிய அணிகள் அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஏலம் நடைபெற உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்திருந்தது.
இதன்படி, நேற்று துபாயில் இந்த இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. மிகவும், விறுவிறுப்பாக நடந்த இந்த ஏலத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ உருவாக்கியது. இதில் லக்னோ அணியை ரூபாய் 7090 கோடிக்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அகமதாபாத் அணியை ரூபாய் 5,600 கோடிக்கு சி.வி.சி கேபிடல்ஸ் குழுமம் வாங்கியது. இதன்மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிசிசிஐ வருமானம் ஈட்டியுள்ளது.
நேற்றைய ஏலத்தில் லக்னோ அணியின் அடிப்படை விலை 2,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் அந்த அணியை ரூபாய் 7090 கோடி வரை சென்று ஏலம் எடுத்துள்ளார் ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இதனால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கோயங்காவை தற்போது இணைய தேடு பொறிகளில் மக்கள் தேடி வருகிறார்கள்.
RPSG Group and CVC Capital Partners bid a staggering sum of money - over USD 1.6 billion - to bag the two new teams in the IPLhttps://t.co/tlYPJepb5Z pic.twitter.com/rISm1BmbpT
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 26, 2021
யார் இந்த சஞ்சீவ் கோயங்கா?
இந்தியாவின் கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு இந்திய பன்னாட்டு கூட்டு நிறுவனம் தான் ராம பிரசாத் சஞ்சீவ் கோயங்கா (ஆர்.பி.எஸ்.ஜி) நிறுவனம். இந்த நிறுவனத்தை ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா தான் நிறுவியவர். இந்திய மதிப்பின் படி அவருக்கு சுமார் 47,405 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டுகளில் ஆர்வம் மிகுந்தவரான சஞ்சீவ் கோயங்கா ஏற்கனவே இந்தியன் சூப்பர் லீக்கில் ஏடிகே மோகன் பகான் என்ற கால்பந்து அணியையும், டேபிள் டென்னிஸ் அணியையும் வாங்கியுள்ளார். தவிர, ஐபிஎல் தொடருக்கான தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியை கடந்த 2016-17-ல் வாங்கியிருந்தார். அந்த அணி, 2016ம் ஆண்டு நடந்த தொடரில் புள்ளிபட்டியலில் 7வது இடத்தையும், 2017ம் ஆண்டு இறுதிப் போட்டி வரையும் முன்னேறி மும்பையிடம் தோல்வியை தழுவியது.
ஏலத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சீவ் கோயங்கா, "ஐபிஎல்லில் மீண்டும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் குறிப்பாக லக்னோவை நகரைத்தான் ஏலத்தில் எடுக்க விரும்பினோம். இது வெறும் ஆரம்பம் தான். போட்டியை வெல்லக்கூடிய அணியை உருவாக்குவதே எங்களின் உண்மையான நோக்கம். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 2017 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது உங்களுக்கு நினைவிருக்கும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்த ஐபிஎல் களமிறங்க காத்திருக்கும் சஞ்சீவ் கோயங்காவின் அணி தற்போது தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அணியை வழிநடத்தவுள்ள வீரருக்கான வேட்டையை நடத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.