மகளிர் உலகக் கோப்பை: வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான பரிசுத் தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.
மொத்த பரிசுத் தொகை ரூ.26.50 கோடியாகும். இது முந்தைய உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை விட 75 சதவீதம் அதிகம்.
கோப்பையை வெல்லும் அணிக்கு ஏறக் குறைய ரூ.10 கோடி வழங்கப்படும்.
இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.4.50 கோடி கிடைக்கும். அரைஇறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ.2.25 கோடியை பரிசாக பெறும். லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.19 லட்சம் வழங்கப்படும்.
தோனியின் சாதனையை முறியடித்த மிதாலி ராஜ்
நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. நியூஸிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் இரண்டு ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணியே வென்றது.
2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார் கேப்டன் மிதாலி ராஜ். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் (ஆடவர், மகளிர் சேர்த்து) அதிகம் முறை அரை சதம் பதிவு செய்தவர் என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அசாருதீன் 6 அரை சதங்களும், தோனி 6 அரை சதங்களும், விராட் கோலி 4 அரை சதங்களும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார் மிதாலி.
இவர் 739 ரன்கள் எடுத்துள்ளார். முன்னாள் கேப்டன் தோனி 723 ரன்களும், அசாருதீன் 678 ரன்களும், கோலி 487 ரன்களும் எடுத்துள்ளனர்.
இலங்கை வீரருக்கு கொரோனா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது.
ஆஸி.க்கு எதிரான தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-ஆவது இலங்கை வீரர் இவர் ஆவார்.
ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டத்தில் மோகன் பாகன் அணி கோவா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டித் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் மோகன் பகான் அணியின் மண்வீர் சிங் 3 ஆவது நிமிடத்தில் மற்றும் 46 ஆவது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார்.
ஆட்ட நேரம் முழுமையாக முடிவடையும் வரை எதிரணி கோல் பதிவு செய்யாததால் 2-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
இந்தியா-இலங்கை போட்டி அட்டவணை மாற்றம்
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பிசிசிஐ இன்று அறிவித்து உள்ளது.
இதன்படி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது, வருகிற 24ந்தேதி தொடங்கி நடைபெறும். இதனை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும். டி20 போட்டிகளில் முதல் போட்டி லக்னோவிலும், அடுத்த 2 போட்டிகள் தரம்சாலாவிலும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியானது, மொகாலியில் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெறும். 2 ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil