Cricket News In Tamil: ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெறும் 36 ரன்களில் சுருண்டு படு தோல்வியை தழுவியது. மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் எழுச்சி கண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று பழி தீர்த்துக் கொண்டது. மற்றும் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணியின் எழுச்சி மிக்க இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஒன்று என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார். மற்றும் ரஹானேவின் தலைமை பண்பை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"டெஸ்ட் போட்டி பார்க்கலாம் என தொலைக்காட்சியை ஆன் செயதேன். 369 என்று தோன்றியது, கண்களை நன்றாக திறந்து பார்த்தேன் பிறகு தான் அது 36- க்கு 9 என்று தெரிந்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சிற்கு இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது. அந்த அணியினர் மிக உக்கிரமாக பந்துகளை வீசி கொண்டு இருந்தனர். சமாளிக்க முடியாத இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியது.
2 -வது போட்டியில் இந்த அணி எப்படி சமாளிக்க போகிறது என யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் ரஹானேவின் சாதுரியத்தில் இந்திய அணி எழுச்சி கண்டது. கேப்டன் ரஹானே மிகவும் அமைதியாக ஆட்டத்தை உற்று கவனித்தார். அதற்கு ஏற்றால் போல் தன்னிடம் இருந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். ஆடுகளத்தில் கூல் கேப்டனாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டார். முதல் நாள் போட்டியில் அவர் அடித்த சதம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்திய அணி வீரர்கள் முதல் பயிற்சியாளர்கள் வரை அனைவரும் ரஹானேவுக்கு தோள் கொடுத்து, வெற்றிக்கு வழி வகுத்தனர்.
மீதமுள்ள இரு போட்டிகளும் இரு அணிகளுக்கும் சவால் வாய்ந்த போட்டிகளாவே இருக்கும். ரோகித் சர்மாவின் வருகை இந்திய அணிக்கு இன்னும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். 10 -15 வருடங்களுக்கு முன்னர், இந்தியா பாக்கிஸ்தான் போன்ற அணிகள் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணி இந்த தொடரை கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட்டின் மீதுள்ள சுவாரசியம் குறையாமல் இருக்கும்" என்று தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்த போட்டியில் கூறியிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.