Border - Gavaskar trophy 2023, R Ashwin Tamil News: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதிவேக 450 விக்கெட்டுகள்… இந்தியாவின் டாப் பவுலர் என நிரூபித்த அஷ்வின்!
இந்நிலையில், இந்தப் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். மேலும், அஸ்வின், கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி, அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அஸ்வின் இந்த சாதனையை எட்ட 89 டெஸ்ட் எடுத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில், கும்ப்ளே தனது 93வது டெஸ்டில் தனது 450வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 80வது டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய இலங்கை வீரர் என்ற சாதனை படைத்தார்.
முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அதோடு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி அஸ்வினின் 450-வது டெஸ்ட் ஆனார். தற்போது உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அஸ்வின் 9-வது இடத்தில் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil