Rishabh Pant – MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இவர் சமீபத்தில் நடந்த முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். குறிப்பாக, டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்த ஆட்டத்தில் 104 பந்துகளில் பண்ட் 93 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 2-0 என கணக்கில் கைப்பற்றியது.
தோனி குடும்பத்தினருடன் பண்ட் பார்ட்டி
இந்நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு பண்ட் துபாய் பறந்தார். அங்கு தோனி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கழிக்க ஏற்கனவே சென்றிருந்த நிலையில், அவர்களுடன் பண்ட் இணைந்து கொண்டார். துபாயில் உள்ள சுஷிசாம்பா உணவகத்தில் தோனி, பண்ட் மற்றும் சில நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் புகைப்படத்தை சாக்ஷி தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் பண்ட் இல்லை
வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணி, இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடருக்கான அணிகளை நேற்று இரவு பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து பண்ட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், விக்கெட் கீப்பர் பண்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil