உலககோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தோனியின் ரன் அவுட்டே, இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில், தோனியின் ரன் அவுட் , அம்பயரின் தவறான அணுகுமுறையால் நிகழ்ந்துள்ளதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி, ரோகித், கோலி, ராகுல் உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்களை துவக்கத்திலேயே இழந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்க திணறினர். இடையிடையே விக்கெட்களும் சரிந்தவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் இந்திய அணி படுதோல்வியடையும் நிலை வந்தது. அப்போது ஆபாந்பந்தவன்களாக தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தனர். 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இந்திய அணியை பெருஞ்சரிவில் இருந்து மிட்டனர். இவர்கள் 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 116 ரன்கள் எடுத்தனர்.
நோ பாலில் ரன் அவுட் : 10 பந்துகளுக்கு இந்திய அணி 25 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை இருந்தபோது இரண்டாவது ரன் எடுக்க முயன்ற தோனி, ரன் அவுட் ஆனார். ஐசிசி விதிமுறைகளின்படி, மூன்றாவது பவர் பிளேவில், 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 வீரர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், நேற்றைய போட்டியிலேயே 6 வீரர்கள் வட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். இதை அம்பயர் கவனிக்கவில்லை. இந்த நிலையிலேயே, தோனியின் ரன் அவுட் நிகழ்ந்துள்ளது. வட்டத்திற்கு வெளியே 6 வீரர்கள் நின்றுகொண்டிருக்கும்போது வீசப்படும் பந்து நோ பால் ஆகவே கருதப்படும். அம்பயரும், நோ பால் தரவில்லை.
அம்பயர் நோ பால் சிக்னல் தந்திருந்தால், தோனி 2வது ரன் எடுக்க ஓடிருக்க மாட்டார். ஏனெனில், அடுத்த பந்து ப்ரீ ஹிட் பந்து தான். அதில் அவுட் கிடையாது என்பதால், தோனி அநாயசமாக சிக்ஸ் அடித்திருப்பார். இந்தியாவும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும். அம்பயரின் தவறான அணுகுமுறையால், 100 கோடி இந்திய மக்களின் கனவு, ஒரே பந்தில் நிராசையாகிப்போனது.
இதுதொடர்பாக, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள்
வானி பஷித்
தோனி ரன் அவுட் ஆன சமயத்தில், வட்டத்திற்கு வெளியே 6 வீரர்கள் நிற்பதை நான் கவனித்தேன். நானே அதை கவனித்திருக்கும்போது அம்பயர் ஏனோ அதை கவனிக்கவில்லை. இது ஜிபிஎஸ் தவறா? ஆனால், துரதிர்ஷ்டவசமாக தோனி ரன்அவுட் ஆகிவிட்டார்.
லச்சிஆரஞ்ச்
என்னவொரு கருத்தான அம்பயர். நோ பாலில் தோனிக்கு ரன் அவுட் தந்துள்ளார் அம்பயர். இந்தியா வெற்றிபெற வேண்டிய போட்டியில், அம்பயரின் தவறால், முடிவே மாறிப்போயுள்ளது. அம்பயரின் நடவடிக்கைகள் ஆஹா..ஓஹோ..
ஆனந்த் நரசிம்மன்
அம்பயரின் தவறான முடிவு அப்பட்டமாக தெரிகிறது. அம்பயரின் தவறால், இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா வெற்றி பெற வேண்டிய போட்டியில், அம்பயர் செய்த தவறால், 100 கோடி இந்திய மக்களின் கனவு நிறைவேறாமலேயே போயுள்ளது. அம்பயரின் இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.