IPL Auction Tamil News: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல். 2022) இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களம் காணுகின்றன. இதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்க தங்களை பதிவு செய்து கொண்ட இந்திய மற்றும் அயல் நாட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
பெங்களூருவில் நடக்க உள்ள இந்த மெகா ஏலத்தில் கலந்துகொள்ள மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 228 வீரர்கள் சர்வேதச அளவில் நடைபெற்ற போட்டிகளில் அந்நாட்டு அணிக்காக களமிறங்கியவர்கள் (கேப்டு ப்ளேயேர்ஸ்). 355 வீரர்கள் சர்வேதச அளவில் நடைபெற்ற போட்டிகளில் அந்நாட்டு அணிக்காக விளையாடாதவர்கள் (அன்- கேப்டு ப்ளேயேர்ஸ்).
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஜூனியர் உலகோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த 8 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏல விதிகளின்படி, 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்த வீரர்கள் மெகா ஏலத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய குறைந்த பட்சம் ஒரு முதல்தர போட்டி அல்லது லிஸ்ட் ஏ கேம் விளையாடி இருக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட் அனுபவம் இல்லையென்றால், ஏலத்திற்கு தகுதி பெறுவதற்கு அவர்கள் 19 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதன்படி, 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த துணை கேப்டன் பேட்ஸ்மேன் ஷேக் ரஷீத், விக்கெட் கீப்பர் தினேஷ் பனா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரவிக்குமார், ஆல்-ரவுண்டர்கள் நிஷாந்த் சிந்து மற்றும் சித்தார்த் யாதவ், தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மானவ் பராக் மற்றும் கர்வ் சங்வான் ஆகிய 8 வீரர்களும் தங்கள் பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்ய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த 8 வீரர்களும் பிப்ரவரி 17 அன்று தொடங்கும் ரஞ்சி டிராபி தொடரில், அந்தந்த மாநில ரஞ்சி அணிகளில் விளையாட சேர்க்கப்பட்டு இருந்தாலும், அவர்களால் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தகுதி பெற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த உள்நாட்டு கிரிக்கெட்டும் விளையாடாதபோது விதிவிலக்கு அளிக்கப்படலாம் என பிசிசிஐ அதிகாரிகள் பலர் நினைக்கிறார்கள்.
இது குறித்து மூத்த பிசிசிஐ நிர்வாகி ரத்னாகர் ஷெட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "ஜூனியர் உலக்கோப்பை மற்றும் லிஸ்ட் ஏ விளையாட்டுகள் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டதால், இந்த வீரர்கள் லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. தொற்றுநோய் காரணமாக ஒரு சீசன் விளையாட்டுகள் நடத்தப்படவில்லை. பிசிசிஐ இதை ஒரு சிறப்பு வழக்காகக் கருத வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நிபந்தனைகளால் வீரர்கள் ஓர் அறிய வாய்ப்பை இழக்கக்கூடாது. அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவர்கள் வாய்ப்பை இழக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அவர்களுக்கான வளர்ச்சி பாதைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். "ஜூனியர் உலகக் கோப்பைகளின் வரலாற்றில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாகும். மேலும், ஐந்தாவது பட்டம் என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு நாங்கள் வைத்திருக்கும் வலுவான அமைப்பு மற்றும் கட்டமைப்பிற்கு சான்றாகும். 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டை இந்திய வாரியம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் அணியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப எங்கள் அணுகுமுறையுடன் நாங்கள் ஒன்றி இருப்பதை உறுதிசெய்ய நெருக்கமாக செயல்படுகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
மெகா ஏலத்தில் கலந்து கொள்ள முடியதா நிலை ஏற்பட்டுள்ள ஜூனியர் உலகோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த 8 வீரர்கள் விபரங்கள் பின்வருமாறு:
அங்கிரிஷ் ரகுவன்ஷி (பேட்ஸ்மேன்)
போட்டிகள் 6, ரன்கள் 278, சராசரி 46.33, ஸ்ட்ரைக் ரேட் 89.39, அதிகபட்ச ஸ்கோர் 144
ஷேக் ரஷீத் (பேட்ஸ்மேன்)
போட்டிகள் 4, ரன்கள் 201, சராசரி 50.25, ஸ்ட்ரைக் ரேட் 65.90, அதிகபட்ச ஸ்கோர் 94
நிஷாந்த் சிந்து (ஆல்-ரவுண்டர்)
போட்டிகள் 5, ரன்கள் 140, சராசரி 46.66, ஸ்ட்ரைக் ரேட் 93.33, அதிகபட்ச ஸ்கோர் 50*, விக்கெட்டுகள் 6, எகானமி 3.09
தினேஷ் பானா (விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்)
போட்டிகள் 6, ரன்கள் 63, சராசரி 31.50, ஸ்ட்ரைக் ரேட் 190.90, அதிகபட்ச ஸ்கோர் 22, கேட்ச்கள் 9, ஸ்டம்பிங்ஸ் 2
ரவிக்குமார் (வேகப்பந்து வீச்சாளர்)
போட்டிகள் 6, விக்கெட்டுகள் 10, எகானமி 3.66
கர்வ் சங்வான் (வேகப்பந்து வீச்சாளர்)
போட்டிகள் 1, விக்கெட்டுகள் 2, எகானமி 4.60
சித்தார்த் யாதவ் (ஆல்-ரவுண்டர்)
போட்டிகள் 1, ரன்கள் 6, சராசரி 6.00, ஸ்ட்ரைக் ரேட் 66.66
*ஆஃப்-பின்னர் மானவ் பராக் போட்டியின் எந்த ஆட்டத்திலும் சரியான முறையில் விளையாடவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.