Cricket Tamil News: ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெறும் 36 ரன்களில் சுருண்டு படு தோல்வியை தழுவியது . மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் எழுச்சி கண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று பழி தீர்த்துக் கொண்டது. மற்றும் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணியின் எழுச்சி கண்ட இந்த வெற்றி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு அணியும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்போது, அடுத்த போட்டியில் கொஞ்சம் கடினமாகவே மீண்டெழுவார்கள். இப்படி அடுத்த போட்டியிலே வலுவாக மீண்டு வந்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, கிரிக்கெட் வரலாற்று புத்தகத்தின் முக்கிய பக்கங்களை தன் வசப்படுத்தியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் உள்ள சுவாரஸ்யங்களை இங்கு காண்போம்.
ரஹானேவின் யுத்தி:
இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு முக்கியமான இரண்டு யுத்திகளை ரஹானே பயன்படுத்தினார். ஒன்று, 2- வது நாள் ஆட்டத்தில் ஜோ பர்ன்ஸ் அவுட் ஆனதும் அடுத்த ஓவரேஅஸ்வினை பந்து வீச அழைத்தது. அஸ்வினும் ரஹானே வைத்திருந்த நம்பிக்கை வீணடிக்காமல் பந்து வீசி விக்கெட்டுகளை மளமளவென சரித்தார். இரண்டாவதாக மைதானத்தின் தன்மை அறிந்து செயல்பட்டது. ரஹானே மைதானம் பற்றி நன்கு அறிந்திருந்தார். எனவே தான் இரண்டு சுழல் பந்து வீச்சளர்களை பயன்படுத்தி தொடர் தாக்குதலை நடத்தி பின்னடைவை ஏற்படுத்தினார்.
அஷ்வினின் அபார பந்து வீச்சு
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் மிக துல்லியமாக பந்து வீசினார். முதலில் அஸ்வின் மாத்யூ வாடேவை பெரிய ஷாட் ஆட வைத்து அவுட் செய்தார். பிறகு ஸ்டீவ் ஸ்மித் எனும் மிகப் பெரிய தூணை சொற்ப ரன்களில் சாய்த்தார். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது. அஸ்வினின் இந்த துல்லியமான பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தது . இது போன்ற நிகழ்வுகள் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தன.
சிராஜ் எனும் அறிமுக வீரன்
அறிமுக வீரரான முகம்மது சிராஜ் வேக பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டி கொண்டிருந்தார். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக 3.3 ஓவர் மட்டுமே வீசி இருந்தார். அதை தொடர்ந்து சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அஸ்வினின் நீண்ட நேர அறிவுரைக்கு பின் சிராஜ் மிக நேர்த்தியாகவே பந்து வீசினார். வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகவே பயன்படுத்திக் கொண்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வலு சேர்த்தார்.
புஜாராவின் பங்கு
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா 17, 3 என்ற சொற்ப ரன்களில் அவுட் ஆகி இருந்தார். ஆனால் முதல் இன்னிங்சில், குறிப்பாக இரண்டாவது நாள் காலையில் வானம் ஒரு வித மேகமூட்டத்துடன் கூடிய மந்த நிலையில் காணப்பட்டது. ஆடுகளம் பேட்டிங் செய்ய இயலாத அளவிற்கு விரிசல் அடைந்த நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட நிலையிலும் இரண்டு மணி நேரங்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடித்து பிறகு அவுட் ஆனார். இது பின்னர் களமிறங்கி விளையாடிய ரஹானேவிற்கு உதவியாக அமைந்தது.
ஜடேஜாவின் சுழலில் சிக்கிய மஞ்ச்ரேகர்
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் போது, தெருவில் ஆடும் கிரிக்கெட் வீரர் என்று ஜடேஜாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்து இருந்தார். அதற்கு தனது பேட்டால் பதில் கூறியிருந்தார் ஜடேஜா. இப்போதும் அவ்வப்போது விமரிசித்து வரும் மஞ்ரேக்கருக்கு தன்னுடைய அதிரடியால் பதிலளித்து இருக்கிறார் ஜடேஜா.
ஜடேஜா 2-வது டெஸ்ட் போட்டியில், விராட் கோலிக்கு பதிலாக களம் இறங்கி இருந்தார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அஸ்வின் ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, மறுமுனையில் ஜடேஜா தனது பணியை திறம்பட செய்தார். ஆட்டத்தின் 96 ஓவரில் ஜடேஜா வீசிய பந்து, மிட்சல் ஸ்டார்க்கை திக்குமுக்காட செய்தது. பேட்டிங்கில் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா 121 ரன்களை குவித்து, இந்தி அணி சரிவில் இருந்து மீட்க உதவினார். சிறந்த பீல்டராக, அஸ்வினின் ஓவரில் மாத்யூ வாடே அடித்த பந்தை, சுப்மன் கில் முட்ட வந்தும் பதட்டம் இல்லாமல் பிடித்து அசத்தினார். இதன் மூலம் ஜடேஜா தான் ஒரு சிறந்த ஆல் - ரவுண்டர் என நிரூபித்துள்ளார் .
ரிஷாப் பந்த் - கேமியோ ரோல்
2- வது நாள் ஆட்ட நேரத்தில் இந்திய அணி 116/4 என்ற நிலையில் இருந்தது. அப்போது முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹியூஸிடம், எந்த அணி போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் "ஆஸ்திரேலியா இந்தியாவின் ஒரு விக்கெட்டை கழட்டினால் கூறிவிடலாம் எனவும், இந்தியாவின் வெற்றி இன்னும் 25 நிமிடங்களுக்கு பிறகு தெரிந்து விடும்" என்று கூறினார்.
அவர் கூறியது போலவே அடுத்த அரைமணி நேரத்தில் இந்தியாவின் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ரிஷாப் பந்த் பந்துகளை பவுண்டரியை நோக்கி பறக்க விட்டு கொண்டிருந்தார். அதுவும் ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ்சின் ஓவரில் இரண்டு ரன்களையும், நான்கு ரன்களையும் அடித்து குவித்தார்.
படத்தில் வரும் கேமியோ ரோல் போல் செயல்பட்ட ரிஷாப் பந்த், இந்திய அணிக்கு 40 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இன்னும் ஓர் தொடக்கத்தை தந்து உற்சாகப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.