Virat kohli latest Tamil News: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். தவிர, தனக்கும் இங்கிலாந்தின் மைதானங்களுக்கும் செட் ஆகாது என்பதையும் நினைவூட்டி இருக்கிறார். ஏனென்றால், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் 180 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2018ம் ஆண்டில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார். ஆனால் தற்போதைய தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் பூஜ்ஜிய ரன்னுடன் வெளியேறிய கேப்டன் கோலி, தொடர்ந்து நடந்த 2வது டெஸ்டிலாவது சிறப்பாக ஆடுவார் என பெரிதும் எதிர்ப்பர்க்கப்பட்டது. ஆனால் 2 இன்னிங்சில் களமிறங்கி ஒரு அரைசதம் கூட அடிக்காமல் (42, 20) ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

கேப்டன் விராட் கோலியின் இந்த சொதப்பல் ஆட்டத்திற்கு என்ன தான் காரணம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ” இந்த தொடரில் கோலியின் கால்கள் ஒரு பக்கமும், பேட் வேறொரு பக்கம் செல்கிறது” என்றுள்ளார்.

தொடர்ந்து பேசிய கவாஸ்கர், “விராட் கோலி கால்களை நகர்த்தி விளையாடியதன் மூலம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். ஆனால் இம்முறை அவருக்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் முன் கூட்டியே பந்தை விரட்டி அடிக்க நினைப்பதால் ஆட்டம் இழக்கிறார். இம்முறை அவருடைய கால்கள் ஒரு பக்கமும், பேட் வேறொரு பக்கம் செல்கிறது. இதுவே அவரிடம் உள்ள குறை.

இதனை அவர் விரைவில் சரியாகப் புரிந்து தனது பாணியை மாற்றினால் தான் அவரால் தொடர்ந்து ரன்களை குவிக்க முடியும். 2வது இன்னிங்சில் கோலி ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil