Umesh Yadav Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக உள்ளவர் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். வலது கை வேகப்பந்து பந்து வீச்சாளரான இவர் இதுவரை 49 டெஸ்ட் போட்டியில் விளையாடி151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்குக்கான சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இருந்து கழட்டி விடப்பட்ட உமேஷ் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அணியில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும், இவருக்கு முன்னதாக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4வது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதில் அணியில் இணைந்துள்ளார்.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும், துடிப்புடன் பந்து வீச களம் கண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் - ஹசீப் ஹமீது ஜோடி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகத்தில் சிக்கி வெளியேறினர்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் சிறிது நேரம் நிதானம் காட்டி 21 ரன்கள் சேர்த்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய 15.3 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர் முழுதும் சிறப்பாக விளையாடி 400 சேர்த்த கேப்டன் ரூட்டை துல்லியமாக பந்து வீசி ஆட்டமிழக்க செய்திருந்தார் உமேஷ்.
கேப்டன் ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் தொடர்ந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய உமேஷ், இங்கிலாந்து அணியின் டேவிட் மலான், கிரேக் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இவரின் அசாத்திய பந்துவீச்சை கவனித்த கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் 'இது அல்லவா ஒரு வீரரின் சிறந்த கம்பேக்' என்று புகழ்ந்து தள்ளினர்.
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உமேஷ் யாதவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் புரிந்துள்ளார். அவை யாதெனில், இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும், 150 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கானுடன் இணைந்து 4வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.