Cricket Tamil News: ஆஸ்திரேலிய மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்ற இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இருப்பினும் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதனைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரிலும் உறுதியாக வெற்றியை பதிவு செய்யும் என்று நினைக்கையில், அடிலெய்டில் நடந்த முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வியை சந்தித்தது. இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீளும் முன் கேப்டன் கோலி தனது மனைவியின் பேறுகாலம் எனக் கூறி தாயகம் திரும்பினார்.
நம்பிக்கையை தளர விடாத அஜின்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி தொடர் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தது. தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடந்த 2வது போட்டியில் அதற்கு பதிலடியும் கொடுத்தது. சொந்த மண்ணில் ஆதிக்கம் காட்ட துவங்கிய ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு நெருக்கடி தந்தது. இருப்பினும் அந்த போட்டியை சாமர்த்தியமாக இந்திய அணி சமன் செய்தது.
பின்னர் கப்பா மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் ஒரு காட்டு காட்டிய இந்திய அணி தொடரை கைப்பற்றி, பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கையில் ஏந்தியது. மேலும் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் தொடர் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை சுவைத்தது.
சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் நடந்த முடிந்த இந்த தொடர் குறித்து ஒரு விழாவில் பேசியுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின், தங்களின் கவனத்தை திசை திருப்புவதில் இந்திய அணியினர் கெட்டிக்காரர்கள் என்று கூறியுள்ளார்.
“இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது இருக்கும் சவால்கள் என்னவென்றால், அவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்து கவனச் சிதறலை ஏற்படுத்துவார்கள். இதனாலேயே நாங்கள் அவர்கள் விரித்த வலையில் சிக்கி தொடரை இழந்தோம்.
உதாரணமாக, கப்பாவில் நடந்த கடைசி ஆட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்தனர். எங்களுக்கும் எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம். அதோடு தொடரில் இருந்து சற்றே கவனம் சிதறி இருந்தோம். இது போன்ற கவனச் சிதறல்களை உருவாக்குவதில் இந்திய அணியினர் கெட்டிக்காரர்கள்” என்று பெயின் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)