Ishan Kishan Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களில் ஒருவராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் (23) உள்ளார். ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் இவர், இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது அறிமுகமானகினார்.
களமிறங்கிய முதல் டி20 போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்திய இஷான் கிஷன் இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடி 80 ரன்கள் குவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகமான இவர் அந்த ஒரு நாள் போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதோடு 2 ஒருநாள் போட்டியில் விளையாடி 60 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்எஸ் தோனியின் ஓய்வுக்கு பின்னர் அந்த இடத்தை தக்கவைத்துள்ளார் இளம் வீரர் ரிஷப் பண்ட். ஒரு கட்டத்தில் இவருக்கு போட்டியாக கேஎல் ராகுல் இருந்து வந்த நிலையில், தற்போது பண்ட்-க்கு போட்டியளிக்கும் விதமாக இஷான் கிஷன் உருவெடுத்து வருகிறார். மேலும், தனது அதிரடியான பேட்டிங்காலும் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். பண்ட் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இஷான் கிஷன் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் விமசர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜாம்பவான் வீரர் தோனியிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டிவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் இஷான் கிஷன். இது குறித்து அவர் பேசுகையில், "முன்னாள் கேப்டன் தோனி எந்த இடத்தில் இறங்கினாலும் (3 முதல் 6ம் இடம் வரை) களத்தில் இறுதிவரை நிலையாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லக் கூடியவர். அவர் எப்போது களம் இறங்கினாலும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக மட்டுமே பாடுபடுவார்.
இதேபோல் நானும் இந்திய அணிக்கு செயல்பட விரும்புகிறேன். தோனியிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது அவைதான். நான் எந்த இடத்தில் களமிறங்கினாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நினைப்பாக உள்ளது. எனக்கு எப்போதெல்லாம் தோனியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என்னிடம் உள்ள சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்கிறேன். அந்த வகையில் தோனி எனக்கு பல முறை அறிவுரை கூறியுள்ளார். அவரிடமிருந்து நான் இன்னும் சிலவற்றை கற்றுக் கொண்டு இனிவரும் காலத்தில் இந்திய அணிக்காக ஒரு நல்ல வீரராக மாற விரும்புகிறேன்." என இஷான் கிஷன் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.