Cricket Tamil News: இந்திய அணியின் 'சைனாமேன்' சுழற்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படும் குல்தீப் யாதவ், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளர்கள் என்று கூறலாம். தனது மணிக்கட்டு கையால் அவர் சுழல விடும் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அசந்த நேரத்தில் ஸ்டம்ப்பை பதம் பார்க்கும். இது போன்ற அசாத்திய பந்து வீச்சு திறமை கொண்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்த அளவிற்கு துல்லியமான பந்து வீச்சு திறனும், மணிக்கட்டு சுழலால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமையும் படைத்த குல்தீப் யாதவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். வெகு சில நாட்களிலேயே அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.
முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் 91 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவரின் ஓய்வுக்கு பிறகு 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்தார்.
இப்போது ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2021) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் தொடரில் நடந்த ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
போதாக்குறைக்கு அடுத்த மாதம் இங்கிலாந்து மண்ணில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடருக்கான டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த வேளையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தனது வாழ்க்கையில் அளித்த பங்களிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் குல்தீப்.
சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வழிகாட்டுதலை ரொம்பவும் மிஸ் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Kuldeep Yadav misses MS Dhoni the most behind the stumps both as a captain & as a cheerleader. @msdhoni @imkuldeep18 #TeamIndia pic.twitter.com/UcDvQTy7XH
— Anushmita.😷 (@anushmita7) May 12, 2021
"சில நேரங்களில் நான் அந்த வழிகாட்டலை இழக்கிறேன், ஏனென்றால் அவருக்கு (தோனி) சிறந்த அனுபவம் உள்ளது. அவர் ஸ்டம்புக்கு பின்னால் எனக்கு வழிகாட்டினார். எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அவரது அனுபவத்தை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன்" என்று குல்தீப் மேற்கோளிட்டுள்ளார்.
மேலும், "மஹி பாய் இருந்தபோது, நானும் சாஹலும் அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம். மஹி பாய் வெளியேறியதிலிருந்து, சஹலும் நானும் ஒன்றாக விளையாடவில்லை. அதோடு அவரின் ஓய்வுக்கு பின் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினேன்" என்று குல்தீப் குறிப்பிட்டுள்ளார்
ஐபிஎல் தொடரில் அணியில் இடம் கிடைக்காததது குறித்து பேசுகையில், "எனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இடம் கிடைக்காதபோது நான் மனச்சோர்வடைந்தேன். 'நான் அந்த அளவிற்கு மோசமான வீரரா?' இது ஒரு அணி நிர்வாக முடிவு, அவர்களிடம் சென்று கேட்பது தவறு. ஐபிஎல் போட்டியின் போது சென்னையில் நான் ஒரு டர்னர் என்பதை அறிந்திருந்தாலும் நான் விளையாடவில்லை. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன், ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.