Cricket Tamil News: இந்திய அணியின் ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படும் குல்தீப் யாதவ், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளர்கள் என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால், இந்திய அணியில் சைனாமேன் ஸ்டைலில் பந்து வீசுபவர்களில் இவர் முதன்மையானவராக உள்ளார். தவிர, தனது மணிக்கட்டு கையால் அவர் சுழல விடும் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அசந்த நேரத்தில் ஸ்டம்ப்பை பதம் பார்க்கும். இது போன்ற அசாத்திய பந்து வீச்சு திறமை கொண்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த அளவிற்கு துல்லியமான பந்து வீச்சு திறனும், மணிக்கட்டு சுழலால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமையும் படைத்த குல்தீப் யாதவ், இந்திய அணியில் ஒரு நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணிக்கு எதிராக நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இவரது பந்து வீச்சு மெச்சும் படியே இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் கண்ட இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நிர்ணயித்த இலக்கை அடைந்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஓர் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சார்பில் பந்து வீசிய குலதீப் யாதவ் 9 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதோடு 48 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த அசத்தலான பந்து வீச்சின் மூலம் தொடருக்கான அணியில் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார் குலதீப்.

குலதீப் சிறப்பாக பந்து வீசி தனது அருமையான பார்மை வெளிப்படுத்தியுள்ளார் என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்து வரும் நிலையில், தான் மீண்டும் சிறப்பாக பந்து வீச யார் காரணம் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், தான் மீண்டும் பார்முக்கு வர அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் ட்ராவிட் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய குலதீப் யாதவ், “நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் தற்போது விளையாடுவதால் அனைவருக்கும் இருப்பது போல பதட்டமும், நெருக்கடியும் எனக்கும் இருந்தது.
ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் டிராவிடுடன் எனது பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்கள் ஆலோசித்தேன். அவரது வார்த்தைகளும், அவர் கொடுத்த ஊக்கமும் தான் நான் எனது சிறப்பான பந்து வீச்சுக்கு காரணம். அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் உள்ளது என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“