Cricket Tamil News: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், தொடரை கைப்பற்றபோவது எந்த அணி? என்பதை நிர்ணயிக்கும், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் வெடித்துள்ள புதிய சர்ச்சை
தென்ஆப்பிரிக்க மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்தனர்.
இந்த வீரர்களில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தங்களது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் அவர்கள் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்க்கான இந்திய அணியில் இடம் பிடித்தனர். ஆனால், இளம் வீரர் முகமது சிராஜ்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
எனவே, தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெளியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், முகமது சிராஜ்க்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்ப்பட்டார்.
இது பலருக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. மேலும், முகமது சிராஜ்க்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஏன்னென்றால், இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக உள்ள இஷாந்த் சர்மா, இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 311 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும், அயல்நாட்டு மண்ணில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்துள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் அதிக விக்கெட்டுகளை வசப்படுத்தி இருந்த இவர், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் அவர் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடர்களுக்கு இடையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். எனினும், கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த இவர், சென்னையில் நடந்த ஆட்டத்தில் தனது 300வது விக்கெட்டை கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டி இருந்தார். அதன் பிறகு நடந்த டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முன்னாள் வீரர்கள் அதிருப்தி
இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள அவருக்கு தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் வீரர்கள், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரரை அணியில் சேர்க்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இஷாந்த் ஷர்மா குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான கிரிக்கெட் லைவ்வில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "இஷாந்த் மற்றும் உமேஷ் விஷயத்தில், உமேஷ் புத்திசாலித்தனமான ஒரு வீரர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இஷாந்த் ஷர்மாவைப் பொறுத்தவரை, அவர் உங்களது முன்னணி ஐந்து பந்துவீச்சாளர்களில் ஒருவரா? இல்லையா? என்று நீங்களே உங்களை கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரர்.
ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது பெரும் வருத்தத்தை தான் அளிக்கிறது." என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இஷாந்த் ஷர்மா குறித்து பேசுகையில், ஜோகன்னஸ்பர்க் டெஸ்டின் நான்காவது இன்னிங்சில் அவர் பந்து வீசி இருந்தால், அது எதிரணியின் பொறுமையை சோதித்து இருக்கும். அந்த அளவிற்கு அழுத்தமாக பந்துகளை வீசக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா. அதனால் தான் அவரை நான் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டிற்கான உத்தேச அணியில் தேர்வு செய்திருந்தேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், நான் இஷாந்த் சர்மாவை ஆதரிக்க காரணம், அவரால் அணியில் நல்ல சமநிலையைக் கொடுக்க முடியும். கடந்த டெஸ்டின் கடைசி இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை கோட்டை விட்டதை பார்த்தோம். இவர்கள் அனைவரும் இயற்கையாகவே விக்கெட் வீழ்த்துபவர்கள். பும்ரா ஸ்டம்பை தாக்கி பந்து வீசக்கூடியவர். ஷமியும் அதையே செய்கிறார். ஷர்துல் தாக்கூர் அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆற்றல் படைத்தவர். ஆனால் அவர் அதிக ரன்களை வாரிக்கொடுத்தார்.
அதுதான் அந்த இறுதி இன்னிங்சில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த பந்து வீச்சாளர்களால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதிக்க முடியவில்லை. மேலும் இந்தியா கொண்டிருக்கும் இந்த சீம் பவுலிங் மூவருக்கும் இஷாந்த் துணையாக இருந்திருப்பார் என்று நினைத்தேன். அவர் சரியான பொருத்தமாக இருந்திருப்பார்," என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.