Cricket tamil news: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 60 ஓவர்களில் 272 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்துக்கு இந்தியா இலக்கு நிர்ணயித்தது. டிரா செய்யும் முனைப்புடன் களம் கண்ட இங்கிலாந்தை இந்திய வேகப்புயல்கள் (51.5 ஓவர்கள்) 120 ரன்களிலேயே சுருட்டி அசத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி மிரட்டினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை தொடக்க வீரர் கேஎல் ராகுல் தட்டிச் சென்றார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில், பல பதற்றமான சம்பவங்களும் நடைபெற்றன. அதாவது இரு அணி வீரர்களுமே சீண்டலில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்த சீண்டலுக்கான அடித்தளத்தை இங்கிலாந்து வீரர்களே அமைத்திருந்தனர். ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பின்வரிசை பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடர் பவுன்சர்களை வீசி நெருக்கடி கொடுத்தார். இதனால், அதிருப்தி அடைந்த ஆண்டர்சன் களத்திலேயே அதை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த ஆண்டர்சன் 2வது இன்னிங்சில் பும்ரா களமிறங்கிய போது அவர் செய்தது போல பவுன்சர் வீசி நெருக்கடி கொடுத்தார். ஆனால், இதற்கு சற்றும் சளைக்காத பும்ரா அதிரடி காட்டி அசத்தினார். தவிர, இவருடன் மறுமுனையில் இருந்த ஷமி ஒரு புறம் ரன் மழை பொழிந்து அரைசதம் கடந்தார். சீண்டல்களை சிறப்பாக எதிர்க்கொண்ட இந்த ஜோடி இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

ஆண்டர்சனுக்கு பும்ரா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஜோஸ் பட்லர் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோரின் சீண்டலுக்கு மைதானத்திலே பதிலடி கொடுத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இதை கோலி பல முறை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இங்கிலாந்து வீரர்களை எச்சரித்துள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “இந்திய அணியை நீங்கள் உசுப்பேற்றி விட்டுள்ளீர்கள் அதன் காரணமாகத்தான் அவர்கள் 2வது டெஸ்டில் ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றியும் பெற்றார்கள்.

இனி நீங்கள் மீண்டும் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும். ஆனாலும் மீதமுள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணி இதே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும், சும்மா இருந்த இந்திய வீரர்களை நீங்கள் சீண்டியதால் இந்த விளைவினை சந்தித்துள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil