Cricket Tamil News: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 121 புள்ளிகளை குவித்தது. இந்த புதிய தரவரிசையில் 1 புள்ளியில் பின்தங்கியுள்ள நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்த இரு அணிகளும் அடுத்த மாதத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியுடான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது குறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் 'கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
"இந்திய அணி முதலிடம் பிடிக்க வீரர்களின் உறுதியான தீர்வுவும், அசைக்க முடியாத கவனமுமே காரணம். இது வீரர்கள் நியமாக சம்பாதித்த ஒன்று. பாதி வழியில் சில விதிகள் மாற்றப்பட்டன. இருப்பினும் தொடர் முயற்சியால் முன்னே இருந்த அனைத்து தடைகளில் இருந்தும் மீண்டு வந்தனர். எனது வீரர்கள் கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள். அவர்களை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்" என்று ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)