நடராஜன், சைனி, ஷர்துல்: யாருக்கு அணியில் இடம்? பலம்- பலவீனம் என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட்  தொடரில் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு பதிலாக  தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது

By: January 3, 2021, 8:01:47 AM

Cricket Tamil News: ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி  விளையாடி வருகின்றது.  அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெறும் 36 ரன்களில் படு தோல்வியை தழுவியது. மெல்போர்னில்  நடந்த இரண்டாவது டெஸ்டில் எழுச்சி கண்டு  8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை  வென்றது. மற்றும் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில்  வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்  காயமடைந்தார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்தும்  விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

நடராஜன் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் சின்னம்பட்டி எனும்  கிராமத்தில் மிகவும் எளிமையான  குடும்பத்தில் பிறந்தவர்.  டி.என்.பி.எல், ஐபிஎல் என உள்ளூர் ஆட்டங்களில்  தனது திறமையை காட்டி தேர்வாளர்கள் கவனம் ஈர்த்ததோடு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கு  நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டு இருந்த இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளில் தனது அசாத்தியமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

Cricket Tamil News

 

நடராஜனின் பலமே  அவருடைய இடது கை வேகப் பந்து வீச்சுதான். சிட்னி மைதானத்தை பொறுத்தவரை சுழற் பந்து வீச்சிற்கே சாதகமாக இருக்கும். இந்த மைதானம்  நடராஜனுக்கு சவால்களை தந்தாலும், சுழற் பந்து வீச்சாளர்  அஸ்வினுக்கு இது சாதமாக இருக்கும்.. நடராஜன் இடது கை  வேகப் பந்து வீச்சாளராக இருப்பதால் ஸ்டம்ப்க்கு வெளியே அதாவது   வலது கை  பேட்ஸ்மேன்களுக்கு  ஆப் சைடில் பந்து வீசும் போது நிறைய கால்  தடங்களை ஏற்படுத்துவார். பிறகு அஸ்வின் பந்து வீச வந்தால் தனது சுழலில் பேட்ஸ்மேன்களை நெருக்கடி கொடுப்பார்.

சிட்னி மைதானத்தில் நடராஜன் வீசும் மித வேக மற்றும்  யாக்கர் பந்துகளுக்கு  கண்டிப்பாக விக்கெட்டுகள் கிடைக்கும். நடராஜன் டெஸ்ட் போன்ற போட்டிகளுக்கு உகந்தவரா,அதே வேகத்தில்  நீண்ட நேரம் பந்து வீச முடியுமா என்பதை பயிற்சியாளர்களே ஆராய்ந்து முடிவு செய்வார்கள். அதோடு  3வது  போட்டியில் 11 பேர் கொண்ட  அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்பது அணியின் தேர்வாளர்களை பொறுத்தே அமையும்.

நடராஜனின் பந்து வீச்சு குறித்து தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் வாசு கூறியதாவது:

நடராஜன் அணியில் இடம் பெற்றதில்  மகிழ்ச்சி அடைகிறேன். நடராஜனின் இடது கை பந்து வீச்சு இந்திய அணிக்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன்.  இதுவரை வெள்ளை பந்துகளை மட்டுமே வீசி வந்த அவருக்கு சிவப்பு பந்து ஒரு புது வித அனுபவமாகவே இருக்கும். இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜனுக்கு  இயற்கையாவே சாய்ந்து கொண்டு வீசும் அந்த அங்கிள் இருக்கின்றது. எனவே அவரது பந்து வீச்சு நிச்சயம்  பாதிப்பை ஏற்படுத்தும்.   இந்த  டெஸ்ட் போட்டி  அவருடைய  வேகப் பந்து வீச்சை கண்டிப்பாக சோதிக்கும்.  ஆஸ்திரேலிய அணியின்  பேட்ஸ்மேன்கள் ஒரு நாள் அல்லது டி -20 போட்டிகளை போன்று அவசரம் காட்டாமல் விளையாடுவார்கள். ஆதனால்  எந்த மாதிரியான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க போகிறார் என்பது முக்கியம். அவரின் மித வேக மற்றும் யாக்கர் பந்துகள் அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும். அதே வேளையில் பந்துகளை ஸ்விங் செய்வதற்கும், இன்னும் வேகமாக  பவுன்சர் வீசுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு வேறு வேறு அங்கிள்களில் வீசுவதற்கு கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். நடராஜன்  வீசும் பந்துகளை பொறுத்தே அவர்  பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பந்து வீச்சாளர் என முடிவு செய்வார்கள்.” என்று கூறியுள்ளார்.

“நடராஜன் மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு  நெருக்கடி கொடுப்பார். அதோடு மட்டுமல்லாமல் முதல் ஓவரை எந்த வேகத்தில் வீசினாரோ அதே வேகத்தில் ஆட்டத்தின் இறுதி வரை வீசி  விக்கெட்டுகளை எடுப்பார். எனவே அவரை ஸ்ட்ரைக் பவுலராக பயன்படுத்த வேண்டும்” என நடராஜன் இடம் பெற்று இருந்த  ரஞ்சி அணியின் கேப்டன்  அபராஜித் கூறினார் .

நடராஜனை தவிர 11 பேர் கொண்ட  அணியில் இடம் பெற வாய்ப்புள்ள வேக பந்து வீச்சாளர்கள்:

நவ்தீப் சைனி

நவ்தீப் சைனி மூன்று பார்மெட்டுகளிலும் விளையாடியவர்.  ஒருநாள் தொடருக்கு முன் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என  பிசிசிஐ தகவல் அளித்திருந்தது. இருப்பினும் அவர் ஆஸ்திரேலிய ஏ-க்கு அணிக்கு  எதிரான  ஆட்டத்தில்,  முதல் இன்னிங்சில் 3/19 ரன்களைக் கொடுத்திருந்தார், ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 16 ஓவர்களில் 87 ரன்களை வாரி  கொடுத்தார்.

 

முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால்  சைனி தேர்வு செய்ய பட வாய்ப்பு இருந்தது. ஆனால் சைனிக்கு பதில்  முகமது சிராஜ்  இரண்டாவது டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டர்.  அறிமுக வீரராக களமிறங்கிய சிராஜ்  ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அணியில் தனது  இடத்தை தக்க வைத்து கொண்டார்.நவ்தீப் சைனிக்கு அவருடைய வேகமும் (145 கி /மீ ), பவுன்சர்களும்  பக்க பலமாக இருக்கும். வேக பந்து வீச்சு  எடுபடாத மைதானங்களில் அவரின்  பந்து வீச்சை ஆஸ்திரேலிய  பேட்ஸ்மென்கள் ஈசியாக சமாளித்து விடுவார்கள்.

சர்துல் தாக்கூர்

சர்துல் தாக்கூர் 2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டியில் ஷமிக்கு பதிலாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு  அறிமுகமாகினார். இதுவே இவர் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டியாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி மற்றும் உமேஷ் என அணியில் வரிசையாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஆனால் தற்போது அணியில்  காலியிடம் உருவாகியுள்ளது. இவரை  டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்வது குறித்து  தேர்வாளர்களே முடிவு செய்வார்கள்.

 

 

சர்துல் தாக்கூர் இதுவரை  62 முதல் தர போட்டிகளில் விளையாடி 206 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிகவும்  கட்டுப்பாட்டான   வேகத்தில் (135 கி.மீ ) பந்துகளை  வீச கூடியவர். பழைய பந்தை கூட இவரால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். தாகூர் பேட்ஸ்மேன்களை தாக்குவதில்  ஆல் – ரவுண்டாக செயல்படுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Natarajan shardul thakur navdeep saini who will be in indias 3rd test team

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X