Cricket Tamil News: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற சம்பியன் அணிகள் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்கி குவித்தனர்.
இந்த மெகா ஏலத்தில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். இதில், டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் நாள் ஏலத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பை கடந்த முதல் வீரர் ஆனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸில் (KKR) அணி 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும், அவரை தங்களது அணியின் கேப்டனாகவும் நேற்று அறிவித்தது.
#ExpressSports | #SportsUpdate || கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!https://t.co/gkgoZMqkWC | #ShreyasIyer | @KKRiders | @ShreyasIyer15 | #IPL2022 #KKR | #AmiKKR pic.twitter.com/ZtQuOAkvzL
— Indian Express Tamil (@IeTamil) February 16, 2022
மும்பை இந்தியன்ஸ் அணி, இளம் வீரர் இஷான் கிஷனை மீண்டும் அணியில் சேர்க்க ஏலத்தில் அவருக்காக 15.25 கோடி ரூபாய் வரை செலவிட்டது. இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்காக 14 கோடி ரூபாய் வரை செலவு செய்தது.
அன்-கேப்டு (uncapped) இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் முதன்மையானவரானார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
வைரலாகும் ட்வீட் - வறுத்துதெடுக்கும் நெட்டிசன்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்திய வீரர்களை மட்டுமின்றி அயல்நாட்டைச் சேர்ந்த வீரர்களையும் உலகறிச் செய்கிறது. இந்த தொடரில் பங்கேற்பதை அனைத்து அயல்நாட்டு வீரர்களும் பெருமையாக கருதுகின்றனர்.
ஐபிஎல் தொடக்க காலத்தில் ஷாஹித் அப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர் உள்ளிட்ட 11 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி இருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்பட்ட எல்லை பதற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்நாட்டு வீரர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தற்போது உள்ள பாகிஸ்தான் வீரர்களில் முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி போன்ற வீரர்களை ஐபிஎல்லில் சேர்க்கலாம் என்கிற விவாதங்கள் அவ்வபோது எழுந்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் செய்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகவும் வேடிக்கையான அந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இஹ்திஷாம் உல் ஹக் என்கிற அந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்,"ஐபிஎல் மெகா ஏலத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மட்டும் கலந்துகொண்டிருந்தால், அவரை ரூ.200 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பார்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை படுபயங்ககரமாய் ட்ரோல் செய்து வருகின்றனர்.
If, Shaheen Shah Afridi was in #IPLAuction. He would’ve gone for 200 crores.
— Ihtisham Ul Haq (@iihtishamm) February 13, 2022
'ஷஹீன் அப்ரிடி திறமையான வீரர் தான். ஆனால் உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லை வேண்டாமா?' என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். சிலரோ, 'ஐபிஎல் அணிகளின் மொத்த பட்ஜெட்டே 90 கோடிதான் மேன்' என்று பங்கமாக கலாய்த்துள்ளனர். மேலும் சிலர் 'ஐபிஎல் கூட அவரை வாங்க முடியாது' என வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால், தற்போது அந்த பாகிஸ்தான் பத்திரிகையாளரின் ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்திய முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்த ஷஹீன் அப்ரிடி
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி மிகத்துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி இந்தியாவை அதன் தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தானின் இந்த அபார வெற்றிக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மிக முக்கிய பங்காற்றி இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு பெரிய பின்னடை ஏற்பட்டு, உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.