ODI World Cup India, PCB chairman, Najam Sethi Tamil News: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 91வது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த அக்டோபர் 18 அன்று மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா, 2023ல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்றும், மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆசியா கோப்பைக்கான நடுநிலை இடம் முன்னோடியில்லாதது அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது. எனவே, நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் 2023 ஆசிய கோப்பைக்காக, போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியிருந்தார்.
ரமீஸ் ராஜா கருத்து

ஜெய் ஷா-வின் இந்த கருத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) கோபமடையச் செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் தனது மௌனத்தை உடைத்த முன்னாள் பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பாபர் ஆசாமின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
பிசிபி புதிய தலைவர் கருத்து
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவர் நஜாம் சேத்தி, அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கான நாட்டின் நிலைப்பாடு குறித்து ரசிகர்களுக்கு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று கராச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியாவுக்குப் போக வேண்டாம் என்று எங்களது அரசு சொன்னால் நாங்கள் போக மாட்டோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு தற்போது எங்கே, எப்படி இருக்கிறது என்பது தெளிப்படுத்தப்பட வேண்டும்.
எங்களது அணி விளையாட அல்லது சுற்றுப்பயணத்தில் விளையாட அல்லது சுற்றுப்பயணம் செய்து விளையாடலாமா என்பது குறித்த முடிவுகள் எப்போதும் அரசாங்க மட்டத்தில் தான் எடுக்கப்படுகின்றன. இதனால், இவை அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே. பிசிபி தெளிவை மட்டுமே பெற முடியும்.” என்று அவர் கூறினார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்ட சேதி, “நிலைமை என்ன என்று பார்த்துவிட்டு தொடர்ந்து முன்னேறுவோம். நாங்கள் எடுக்கும் எந்த முடிவும், நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அந்த ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி கைப்பற்றி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பையைத் தவிர, 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தங்கள் நாட்டில் திரும்பியதிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் திட்டமிடப்படும் முதல் ஐசிசி (ICC ) போட்டி இதுவாக இருக்கும்.
பாகிஸ்தானுக்கு இந்தியா பயணம் செய்தால், 13 ஆண்டுகளில் அண்டை நாட்டிற்கான முதல் சுற்றுப்பயணமாக இருக்கும். இந்திய அணி கடைசியாக 2008 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குச் சென்றது. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பு தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, 2012ல் நடந்த இருதரப்புத் தொடருக்காக பாகிஸ்தான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்தது. இருப்பினும், இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஏசிசி தொடர்களில் மோதி விளையாடி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil