பயிற்சியாளர் டிராவிட்டின் கவனத்தை ஈர்த்த இலங்கை பவுலர் இவர் தானம்!
Rahul Dravid talks about Srillankan cricketer Dushmantha chameera Tamil News: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் தனது கவனத்தை ஈர்த்த வீரர் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
Cricket Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட். ஓய்வுக்கு பின் மற்ற வீரர்களை போல் கமெண்ட்ரி பாக்சில் உட்கார்ந்து கொண்டு விளையாடும் இளம் வீரர்களை விமர்னம், மற்றும் கேலி கிண்டல் செய்யாமல், சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்தும் இளம் வீரர்களை உருவாக்கும் பணியை தேர்வு செய்தார். அந்த பணியில் தனது முழு உழைப்பையும், கவனத்தையும் செலுத்திய டிராவிட் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான (under-19) உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை வென்ற இளம் இந்திய அணியை உலகின் முன் நிறுத்தினார்.
Advertisment
இவரது பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஆவர். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த வீரர்கள் அவ்வப்போது சாதனை நிகழ்த்தி தங்களது குருவிற்கு புகழ் மாலை சூடுகின்றனர். ட்ராவிட்டும் தனது சிசியர்களை எந்த இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை. மேலும் இவர்களில் யார் தனது கவனத்தை ஈர்த்த வீரர்கள் என்று அவ்வப்போது அவரே கூறி விடுவார்.
இந்நிலையில், இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியை சுவைத்துள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த 2 போட்டிகளில் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டின் கவனம் ஈர்த்த அந்த இளம் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனவே போட்டிக்கு பின்னரான பத்திரிகையாளர் சந்திப்பில் டிராவிட் அது யார் என நிச்சயம் குறிப்பிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படியே டிராவிட்டும் இந்த 2 போட்டிகளில் தனது கவனத்தை ஈர்த்த வீரர் குறித்து பேசினார். இதில் என்ன ட்விஸ்ட் என்றால், அவர் குறிப்பிட்டது ஒரு இலங்கை வீரரை. அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தான். அந்த வேகப்பந்து வீச்சாளர் பெயர் துஷ்மந்தா சமீரா. இவர் நடந்த 2 போட்டிகளிலும் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் இருந்த போதிலும் அவருடை பந்து வீச்சு திறனை கண்டு தான் வியந்ததாக டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.