Shikhar Dhawan Tamil News:- இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகார் தவான். இடக்கை பேட்ஸ்மேனான இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணி சார்பில் களமிறங்கினார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் களம் கண்ட இவர் 2315 ரன்கள் சேர்த்துள்ளார். 145 ஒருநாள் போட்டிகளில் 6105 ரன்களும், 68 டி20 போட்டிகளில் 1759 ரன்களும் சேர்த்துள்ளார். தவிர, ஐபிஎல் தொடர்களில் 184 போட்டிகளில் களமிறங்கி 5576 ரன்களை குவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் தான் இழந்த இடத்தை பெறுவதற்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தவான் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தினார். இதற்கு கலவையான விமர்சனங்களை பெற்ற இவர் இலங்கை மண்ணில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இருந்தார்.
35 வயதாகும் தவான் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். தவிர துவக்க வீரர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்த்து இந்திய அணி வலுவான இலக்கை எட்ட உதவியும் வருகிறார். சச்சின் - சேவாக் ஜோடிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் ஜோடி தான் இன்றளவும் சிறப்பான துவக்க ஜோடியாக இந்திய அணியில் இருந்து வருகிறது.
இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு ஷிகார் தவான் தேர்வு செய்யப்படுவார் என்பதில் சந்தமில்லை. இருப்பினும், 35 வயதாகும் அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்படுகிறது. எனவே தவானுக்கு பிறகு அந்த இடத்தை எந்த வீரர் நிரப்புவார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் இளம் வீரர்கள் சிலரை அந்த இடத்திற்கு தகுதியானவர் என குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தாவனின் இடத்தை நிரப்ப நமக்கு ஒரு மாற்றுவீரர் கிடைத்து விட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், அதிரடி வீரருமான வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியில் ஷிகார் தவான் அவரது இடத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அந்த இடத்தில் சரியான மாற்று வீரராக இளம் வீரரான படிக்கல் திகழ்வார். அவர் விளையாடி வரும் விதம் அபாரமாக இருக்கிறது. மேலும் அவர் விளையாடுவதை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன்.ஐபிஎல் தொடரில் அவர் அடித்த செஞ்சுரி அவர் எப்படிப்பட்ட திறமையான வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது." என்றார்.
இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தேவ்தத் படிக்கல், அந்த அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் படிக்கல் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் இனி வரும் ஐபிஎல் தொடர் மற்றும் எதிர்வரும் தொடர்களில் இடம் பெறும் பட்சத்தில் அவர் நிச்சயம் இந்திய அணியின் அடுத்த துவக்க வீரர் ஆக மாற அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சர்கள் கூறுகிறார்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.