Hardik Pandya Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இந்திய அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமாகி இவர் இதுவரை 63 ஒருநாள், 49 டி20 மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்று வந்த பாண்டியா அதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் பந்து வீசாமல் வெறும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட அவர் பேட்டிங் மட்டும் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருவது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெஸ்ட் அணியில் அவர் இடம் பிடிக்க நிச்சயம் பந்துவீசி ஆக வேண்டுமென இந்திய நிர்வாகம் உறுதியான நிலையை எடுத்துள்ளது.
பொதுவாக இந்திய மைதானங்களில் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடுவதால் அவர் பெரும்பாலும் களமிறப்படுவதில்லை. ஆனால், வெளிநாட்டு மைதானங்களில் நிச்சயம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்கிற காரணத்தினால் பாண்டியா டெஸ்ட் அணியில் நீடிப்பார் என்று கூறப்பட்டது.
எனினும், தற்போது பந்துவீச கஷ்டப்பட்டு வரும் பாண்டியா மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பது சந்தேகம் தான் என்றும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை இந்திய அணி தேடி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதற்காகவே ஆஸ்திரேலிய தொடரின் போது அரை சதம் அடித்து அசத்திய ஷர்துல் தாகூரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மாற்ற இந்திய அணி பரிசோதித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷர்துல் தாக்கூர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவிர பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
எனவே, இனிவரும் போட்டிகளிலும் ஷர்துல் தாகூர் இடம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எட்டாவது வீரராக களமிறங்கிய அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அவர் விளையாடுவது உறுதியாகி விட்டது. இது ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில் கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.