AUS vs SA: Mitchell Starc Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 21 ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) மெல்போர்னில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட நேரத்தில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 575 குவித்து டிக்ளர் செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தனது 100 டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து 200 ரன்கள் குவித்தார். சதம் விளாசிய அலெக்ஸ் கேரி 111 ரன்கள் எடுத்தார். ஸ்டீவன் ஸ்மித் 84 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது 2வது இன்னிங்சை தொடங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கர் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க வீரர் சரேல் எர்வீ 7 ரன்னுடனும், தியூனிஸ் டி ப்ரூயின் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய ஸ்டார்க்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க், ஆட்டத்தின் முதல் நாள் காலை செஷனின் போது லாங்-ஆனில் கேட்ச் பிடிக்கும் போது அவரது இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தோடு அவர் விளையாடி வந்த நிலையில், இன்று மாலை செஷனில் அவர் பந்துவீசும் போது, அவரது விரலில் இருந்து ரத்தம் சொட்டு சொட்டாக வடிந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தமால் அவர் தொடர்ந்து பந்துவீசினார்.
மேலும், ஸ்டார்க் தனது நடுவிரலில் இருந்து வடிந்த ரத்ததை அவர் அணிந்திருந்த பேண்டில் துடைத்தார். அவர் துடைத்த இடமெல்லாம் ரத்த கறையாக இருந்ததை காண முடிந்தது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஸ்டார்க்கின் கடமை உணர்ச்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil