Saurashtra vs Delhi, Elite Group B, Jaydev Unadkat Tamil News: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று ராஜ்கோட்டில் தொடங்கிய ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்து, பேட்டிங் செய்ய களமாடியது.
முதல் ஓவரிலே ஹாட்ரிக்-விக்கெட்… மிரட்டி எடுத்த உனத்கட்
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக துருவ் ஷோரே - ஆயுஷ் பதோனி ஜோடி களமிறங்கினர். சவுராஷ்டிரா அணிக்காக முதல் ஓவரை கேப்டன் உனத்கட் வீசினார். ஸ்ட்ரைக்கில் இருந்த துருவ் ஷோரே முதல் ஓவரில் முதல் பந்தில் எல்பிடபிள்யூ அப்பீலில் இருந்து தப்பினார். மேலும், முதல் 3 பந்துகளில் அவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், 4வது பந்தில் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ராவல், அடுத்து வந்த கேப்டன் யாஷ் துல் உனத்கட் வீசிய 5,6 பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இந்த அசத்தல் பந்துவீச்சு மூலம், வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் உனத்கட் ஹாட்ரிக் - விக்கெட் எடுத்து மிரட்டினார். இதனால், ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கர்நாடகாவின் வினய் குமார் 2017-18 காலிறுதியில் மும்பைக்கு எதிரான போட்டியில் முந்தைய ஆரம்ப ஓவரில் ஹாட்ரிக் எடுத்தார். ஆனால் அது முதல் மற்றும் மூன்றாவது ஓவர்களை சேர்த்து தான் வந்தது.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு நின்றுவிடாத கேப்டன் உனத்கட், டெல்லி அணியில் தொடர்ந்து களமாடிய வீரர்களின் விக்கெட்டுகளையும் சாய்த்தார். அடுத்த ஓவரில், ஜான்டி சித்து (4), லலித் யாதவ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது 21வது 5 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். பின்னர் அதே மூன்றாவது ஓவரில் அவர் அறிமுக வீரர் லக்ஷ்ய தரேஜாவை (1) வெளியேற்றினார். இதனால், டெல்லி 7 விக்கெட்டு இழப்பிற்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடியது.
இதன்பிறகு, ஒரு கட்டத்தில் 53 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணி 100 ரன்களை தொடுமா? என நினத்திருந்த வேளையில், களத்தில் இருந்த ஹிரித்திக் ஷோக்கீன் - ஷிவ்னாக் ஜோடி 9வது விக்கெட்டுக்கு சிறப்பான ஜோடியை அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாகா ஆடிய ஷோக்கின் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பொறுமையாக ஆடி வந்த ஷிவ்னாக் 38 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 35 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கேப்டன் உனத்கட் மொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும், 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் சாதனையையும் பதிவு செய்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான உனத்கட் (தனது 19 வயதில்) சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தனது 2வது டெஸ்ட் போட்டியை ஆடினார். இந்த ஆட்டத்தில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முன்னதாக, கடந்தாண்டில் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் கோப்பை முத்தமிட்ட சவுராஷ்டிரா அணியில் விளையாடிய உனத்கட் 10 போட்டிகளில் 3.33 என்ற எக்கனாமியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவுராஷ்டிராவுக்கு நல்ல தொடக்கம்:
தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஜெய் கோஹில் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் சவுராஷ்டிரா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து டெல்லியை விட ஒரு ரன் பின்தங்கியுள்ளது. அரைசதம் விளாசியுள்ள ஹர்விக் தேசாய் 72 ரன்களுடனும், சிராக் ஜானி 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Mumbai vs Tamil Nadu, Elite Group B - 144 ரன்னில் சுருண்ட தமிழக அணி… ஆறுதல் கொடுத்த பிரதோஷ் பால்…
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதும் ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில்டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. அரைசதம் அடித்த பிரதோஷ் பால் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் மும்பை அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி தமிழக அணியை விட 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. சர்பராஸ் கான் 22 ரன்களுடனும், ஷாம்ஸ் முலானி 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.