Cricket Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத கேப்டனாக வலம் கேப்டன் விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டில் U -19 உலக கோப்பை போட்டிக்காக கேப்டன் கோலி தலைமையில் களம் கண்ட இந்திய அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் இந்திய அணிக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கப்பட்ட விராட் கோலி, தனது அசாத்திய திறனால் சர்வதேச போட்டிகளில் ரன் மழை பொழிந்தார். தொட்டதெல்லாம் துவங்கும் என்பார்களே, அதற்கேற்றால் போல் களமிறங்கிய ஆட்டங்களில் எல்லாம் அசுர வதம் செய்திருந்தார். அவரின் வலது கையால் ஆடும் கவர்-ட்ரைவ் ஷாட்டை காண்பதற்காவே ரசிகர் படை குவிந்தது. இவரின் ஆட்டத்தை கவனித்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவரை 'ரன் மெஷின்' என்று அழைத்தனர்.
இதுவரை 70 சதங்களும், 115 அரைசதங்களும் கடந்துள்ள கேப்டன் கோலி 22,818 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 100 சர்வதேச சதங்களை அடித்த பேட்டிங் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் பேட்ஸ்மேங்களில் ஒருவராகவும் உள்ளார்.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் லீக் தொடரின் 14வது சீசனில் கலந்து கொண்ட கேப்டன் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. நடந்த 7 போட்டிகளில் 5ல் அந்த அணி வெற்றியை சுவைத்தது.
தற்போது களத்தில் இருந்து விலகி இருந்தபோதிலும், கேப்டன் கோலியை பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வைரலாக வண்ணமே உள்ளன. அந்த வகையில், கேப்டன் கோலி பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை அவரது நண்பர் ஷாலாஜ் சோந்தி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, 2ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)