Cricket news in tamil: இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17 முதல் தொடங்கும் இந்த டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை மூத்த வீரர் ரோகித் சர்மா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் விராட் கோலியின் ஒருநாள் கேப்டனாக எதிர்காலம் பற்றி பிசிசிஐ தலைமை மற்றும் தேசிய தேர்வுக்குழுவால் அடுத்த இரண்டு நாட்களில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோலி ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியை இழக்கும் வாய்ப்பும் வலுவாக உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐசிசி தற்போது நடத்தும் டி20 உலக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இது கேப்டன் கோலியின் வழிநடத்துதலில் மீண்டும் விமர்சனம் எழு காரணமாக அமைத்துள்ளது. எனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தேசிய தேர்வாளர்களுடன் இரண்டு நாட்களில் விர்ச்சுவல் சந்திப்பை நடத்தும்போது, கோலியின் கேப்டன் பிரச்சினை விவாதிக்கப்படும் என அக்டோபர் 31ம் தேதி பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.
தற்போது, இந்தியாவுக்கு இந்தாண்டு ஒருநாள் தொடர்கள் ஏதும் இல்லை. அடுத்த ஆண்டு கூட, ஆஸ்திரேலியாவில் மற்றொரு டி20 உலகக் கோப்பை தொடர் விளையாட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 50-ஓவர் ஆட்டங்கள் மிகக் குறைவு தான்.
“முதலில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி முடிவு செய்யப்பட வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்க விரும்பவில்லை என்று ரோகித் இதுவரை கூறவில்லை. அவர் ஏன் தலைமை தாங்க விரும்ப மாட்டார்? முழுநேர டி20 கேப்டனாக இது அவரது முதல் தொடர், ”என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் ரோகித் ஓய்வெடுப்பாரா என்று கேட்டபோது கூறினார்.
இருப்பினும், ரோகித் போன்ற சிறந்த வீரர்கள் கான்பூர் (நவம்பர் 25-29) மற்றும் மும்பையில் (டிசம்பர் 3-7) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், டி20 போட்டிகளில் ஓய்வில் இருப்பவர்கள் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு வருவார்கள், அதே சமயம் டி20 போட்டிகளில் விளையாடும் சிலருக்கு டிசம்பர் இறுதியில் தொடங்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன் ஓய்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலி ஒருநாள் போட்டி கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை…
இந்திய அணி பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 - 50 ஓவர் ஆட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஜூன் வரை இந்திய மண்ணில் 17 டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான புதிய கேப்டனை நியமிக்க அவசரப்படவில்லை என்றாலும், இந்த 3 ஒருநாள் போட்டிக்கு மட்டும் இந்திய அணி தனி கேப்டன் நியமிக்க தயக்கம் காட்டி வருகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அதற்கு முன் இந்தியா தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் கலந்து கொள்கிறது. மேலும் கோலி தானாக முன்வந்து 50 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா அல்லது பிசிசிஐ அவருக்கு ஊக்கமளிக்கும் வரை காத்திருப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், ஒருநாள் போட்டியில் கேப்டனாக கோலியின் நாட்கள் எண்ணப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் கழட்டி விட வாய்ப்பு அதிகம்
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் சரியாக 11 மாதங்கள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் டி20 போட்டிகள் அட்டவணை முடிவடையும். அப்போது முடிந்தவரை அதிகமான வீரர்களை தேர்வு செய்ய தேசிய தேர்வுக் குழு பார்க்கும்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான பார்மை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் மற்றும் உடல்தகுதி தீர்க்கப்படாத மர்மமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட், மிகத்துல்லியமாக பந்துகளை வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவரான அவேஷ் கான், அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹர்டிக் பாண்டியாவிற்கு எதிர் கால மாற்றாக ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இருக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஜம்மு - காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் போன்ற வீரர் ஒரு ஆச்சரியமான தேர்வாக இருக்கலாம். ஏனெனில் அடுத்த டி20 உலக்கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது. அந்த மைதானங்கள் அதிகம் பவுன்ஸ் ஆக கூடியவை.
அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் போன்றவர்கள் அனைவரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு திரும்பலாம். அதே சமயம் ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.