Michael Bracewell New Zealand cricketer Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று புதன்கிழமை நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்களில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசி அபார சாதனை படைத்தார். அவர் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என ருத்ர தாண்டவம் ஆடி 208 ரன்கள் குவித்தார்.நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 350 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன்களும் அரைசதம் விளாசிய மிட்செல் சான்ட்னர் 57 ரன்களும் எடுத்தனர். சதம் விளாசி இறுதிவரை போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவை கதிகலங்க செய்த பிரேஸ்வெல்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7வது விக்கெட்டுக்கு களம் புகுந்த அவர் இந்தியாவை கதிகலங்க செய்திருந்தார். குறிப்பாக, வேகப்பந்துவீச்சில் மிரட்டி வந்த முகமது ஷமியின் ஓவரில் ஒரு துணிச்சலான ஸ்கூப் அடித்தார். இதேபோல், சுழல் வித்தை காட்டி வந்த குல்தீப் யாதவின் பந்தை அசத்தலாக டிரைவ் அடித்தார். மேலும், அவர் பந்தை விரட்ட சரியான இடத்தை தேர்வு செய்து, அதை கச்சிதமாக அடித்து முடிக்கிறார்.
இந்திய பந்துவீச்சு வரிசை அவரது அணியின் மற்ற வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்து இருந்தாலும், அவரை எதுவும் செய்ய முடியவில்லை. அதிரடியை கைவிடாத அவர் சதம் விளாசினார். ஆனால், அதை அவர் பெரிதாக கொண்டாடவில்லை. ஏனென்றால் இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே அவரின் ஒரு குறியாக இருந்தது. கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை தாக்கூர் வீசவே, முதல் பந்தை லாங்-ஆனில் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதை அண்ணார்ந்து பார்த்த இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வயிற்றிலும் புளியைக் கரைத்து இருந்தார்.
2வது பந்து ஒயிடு செல்ல, 5 பந்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பு உச்சத்தில் இருந்த அந்த தருணத்தில் மீண்டும் 2வது பந்தை வீசிய தாக்கூர், இம்முறை லெக் ஸ்டம்ப்பில் யார்க்கரை சொருகினார். அதை துளியும் எதிர்பாராத பிரேஸ்வெல் பந்தை தனது மட்டையால் விரட்ட முடியாமல் போனது. எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டு பிரேஸ்வெல் அவுட் என அறிவிக்கப்பட்டார். இதனால், இந்தியா 12 ரன்னில் திரில் வெற்றி பெற்றது.
இருப்பினும், மிரட்டல் அடி அடித்த பிரேஸ்வெல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 78 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 140 ரன்கள் குவித்து மிரட்டினார். இப்படியொரு அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த நியூசிலாந்து வீரர் யார்? என்று கிரிக்கெட் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். அவ்வகையில், பிரேஸ்வெல்லின் கிரிக்கெட் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்.
உலகின் அபாயகரமான நெ. 7 பேட்ஸ்மேன்: யார் இந்த பிரேஸ்வெல்?
மைக்கேல் பிரேஸ்வெல் கடந்த 10 வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இது போன்ற இக்கட்டான சுழலில் அவர் விளையாடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன், அவரது நான்காவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 301 ரன்களைத் துரத்திய போது 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் கடைசி ஓவரில் 20 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார்.
பிரேஸ்வெல்லின் மொத்த குடும்பமே கிரிக்கெட் குடும்பம் ஆகும். அவரது குடும்பத்தில் ஜான் பிரேஸ்வெல் (மாமா), பிரெண்டன் பிரேஸ்வெல் (மாமா) மற்றும் டக் பிரேஸ்வெல் (உறவினர்) ஆகிய மூன்று டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ளார். மேலும், அவரது தந்தை மார்க், சிறுவயதிலிருந்தே அவரது பயிற்சியாளர், நியூசிலாந்தில் முதல்தர கிரிக்கெட் விளையாடியும் இருக்கிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil