T20 World cup Tamil News: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2 அலையின் அச்சத்தால் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 7-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கடந்த ஞாயிற்று கிழமை (17ம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் (அக்டோபர் 23) 'சூப்பர் 12' சுற்று ஆட்டங்கள் அரங்கேற உள்ளன.
முன்னாள் வீரர்கள் கருத்து…
நடப்பு டி20 உலகக்கோப்பை வாகை சூட தகுதி பெற்றுள்ள அனைத்து அணிகளும் வரிந்து கட்டியுள்ள நிலையில், தொடரை கைப்பற்றி கோப்பையை எந்த அணி உச்சிமுகறும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக், 'டி -20 உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில், "எந்தொரு ஒரு தொடரையும் இந்த அணிதான் வெல்லும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், ஒரு அணிவெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை கூற விட முடியும். ஐக்கிய அரபு அமீரக மைதானங்களின் சீதோஷ்ண நிலையை பொறுத்தமட்டில் மற்ற எல்லா அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கே மிகப்பெரிய வாய்ப்புள்ளது. அந்த அணியிடம் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்.
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சிரமமின்றி எளிதில் வென்றது. அதுவும் கேப்டன் கோலியின் பங்களிப்பு இல்லாமலேயே 154 ரன்கள் கொண்ட இலக்கை எட்டிப்பிடித்தனர். இது போன்ற இந்திய துணை கண்டத்து ஆடுகளங்களில் டி 20 கிரிக்கெட்டில் இந்தியா உலகின் மிகவும் அபாயகரமான அணியாகும்." என்று கூறியுள்ளார்.
டி 20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளது என்று தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இணையப்பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், "டி 20 கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதை சாதிப்பதற்கு இதுவே சரியான தருணம். எனினும், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் போட்டியில் உள்ளன. எனவே கோப்பையை வெல்வது எளிதான காரியம் அல்ல." என்றுள்ளார்.
மேலும் அவர், "நடப்பு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி முன்னணியில் இருப்பதாகவும், இதில் அதிக ரன் குவிப்பில் இந்தியாவின் லோகேஷ் ராகுலும், அதிக விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடத்தை பிடிப்பார்கள்’ என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரெட்லீ குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசுகையில், "பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடிய விதத்தை பார்க்கும் போது, இந்த உலக கோப்பையை வசப்படுத்துவதில் அந்த அணிக்கே இப்போது வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தென்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், நடப்பு உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகருமான மேத்யூ ஹைடன், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் கேப்டன்ஷிப்பே முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "சமீபத்தில் ஐக்கிய அரபு மண்ணில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனும் தனிப்பட்ட முறையில் சோபிக்கவில்லை என்றாலும், இங்குள்ள சூழலில் தங்களது வீரர்களை திறம்பட வழிநடத்தி இருந்தனர். எனவே, இங்கு சிறப்பான கேப்டன்ஷிப்பே முக்கிய பங்கு வகிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியை நான் பல வருடங்களாக மிக நெருக்கமாக பார்த்து வருகிறேன். இந்திய வீரர்களில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.