Ranji Trophy: Tamil Nadu’s Pradosh Ranjan Paul conquers fort Kotla Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு - டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த 27 ஆம் தேதி முதல் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்சில் 303 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழக அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின்னர், நேற்று 3வது நாள் ஆட்டத்தில் விஜய் சங்கர் (17 ரன்) - பிரதோஷ் ரஞ்சன் பால் (3 ரன்) ஜோடி களமாடினர். இந்த ஜோடியில் இடது கை ஆட்டக்காரரான ரஞ்சன் பால் நிலைத்து நின்று ஆடினார்.
மேலும், 7வது வீரராக களமாடிய அவர் டெல்லி பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டி சதம் விளாசினார். 212 பந்துகளில் 16 பவுண்டரிகளை விரட்டிய ரஞ்சன் பால் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 22 வயதான ரஞ்சன் பால் முதல்தர கிரிக்கெட்டில் அடித்த முதல் சதம் இதுவாகும்.
தமிழக அணியில் விஜய் சங்கர் 52 ரன்களும், அஸ்வின் கிறிஸ்ட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 116 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 427 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
டெல்லியை தகர்த்த திருப்பூர் வீரர்
தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் தனது முதல் முதல் தர சதத்தை விளாசிய பின் துள்ளிக் குதித்தார். பிறகு தமிழக வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஒரு வணக்கத்தை வைத்த கையோடு மட்டையைச் சுழற்றினார். முன்னதாக, தமிழ்நாட்டிற்காக வயதுப் பிரிவுகளில் 29 சதங்களை அடித்துள்ளார். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சியில் அறிமுகமான அவர் அதே அணிக்கு எதிராக 30வது சதத்தை விளாசி இருக்கிறார். அப்போது அவர் 78 ரன்கள் எடுத்திருந்தார், முந்தைய ஐந்து முதல் தர ஆட்டங்களில் அவர் அடித்த ஒரே அரைசதம் அதுவாகும்.
இந்த ஆட்டத்திற்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் அளித்த பேட்டியில், "இது எனக்கு ஒரு சிறப்பு தருணம், நானும் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். நான் நான்கு வருடங்களுக்கு முன் அறிமுகமானேன். நான் பல போட்டிகளில் விளையாடவில்லை. இந்த சதம் எனக்கு நிறைய அர்த்தம். சதம் சற்று முன்னதாக வரும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
எங்களை தேநீர் இடைவெளை வரை விளையாடச் சொன்னார்கள். பின்னர் வெளிச்சம் திடீரென குறைந்துவிட்டதால், நாங்கள் டிக்ளேர் செய்து நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற முயற்சிப்போம் என்று முடிவு செய்யப்பட்டது." என்று கூறினார்.
புவனேஸ்வரில் இருந்து திருப்பூர்
பிரதோஷ் ரஞ்சன் பால் குடும்பத்தினர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி ஊழியரான அவரது தந்தை பிரதீப் பால், புவனேஸ்வரில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து 1600 கிமீ தொலைவில் உள்ள திருப்பூருக்கு மாற்றப்பட்டார். அப்போது 12 வயதான பிரதோஷ் தனது புதிய வீட்டில் ஆரம்பத்தில் சிரமப்பட்டுள்ளார்.
ஒரு நாள், பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ரமேஷின் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அகாடமியில் கோடைகால பயிற்சி முகாமை அறிவிக்கும் துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தார். ரமேஷ் அவரை தனது அகாடமியில் சேர்த்துக்கொண்டார். அதன்பிறகு பிரதோஷ் ரஞ்சன் பால் தனது தொழில்முறை கிரிக்கெட்டை நோக்கிய பயணத்தை தொடங்கினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பூரைச் சேர்ந்த முதல் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வீரரானார் பிரதோஷ். அவரது இந்த எழுச்சி திருப்பூர் பகுதியில் கிரிக்கெட் வளர உதவியது என்று ரமேஷ் கூறினார்.
தற்போதைய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) தலைமைக் கண்காணிப்பாளரும், அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளருமான வி ரமேஷ் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அவரது 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் நாட்களில் இருந்தே, அவரது குணமும் அணுகுமுறையும் தனித்து நின்றது. அவரை வலை பயிற்சியில் இருந்து வெளியே இழுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாட்களும் இருந்தது. அவர் தனது அறிமுகத்திலேயே சதத்தை தவறவிட்டார். ஆனால் இப்போது அவருக்கு ஒரு சதம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் தான் எங்கள் மைலேஜ், எங்கள் பகுதியில் இருந்து முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியவர். அவர் இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணியில் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு, எங்கள் அகாடமியில் நாங்கள் டர்ஃப் விக்கெட்டுகளை வைக்க வேண்டியிருந்தது. ஏனெனில் எங்கள் அகாடமியில் பதிவுகள் திடீரென அதிகரித்தன. அவர் ஏற்கனவே இங்கு ஒரு நட்சத்திரமாக மாறி இருந்தார்.
“அவர் எப்போதுமே ஒரு டீம் மேன். பொதுவாக அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ஆனால் இன்று அவர் 7வது இடத்தில் பேட்டிங் செய்தார்.
அவர் ஒரு இயற்கையாவே ஒரு லீடர். அவர் U-14, U-16, U-19, U-23 மற்றும் U-25 ஆகிய போட்டிகளில் தமிழ்நாட்டை வழிநடத்தியுள்ளார். எதிர்காலத்தில் சீனியர் அணியை ஒருநாள் வழிநடத்தலாம்” என்று ரமேஷ் கூறியுள்ளார்.
A fantastic 124 from Pradosh Ranjan Paul put Tamil Nadu in a strong position at the end of Day 3 in the #DELvTN clash as Delhi trail by 96 runs in the second innings. #RanjiTrophy | @mastercardindia
Here's how the action unfolded🎥https://t.co/VV9e7VJoxD pic.twitter.com/rJKsr5h1vK— BCCI Domestic (@BCCIdomestic) December 29, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.