Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- டெல்லி கேப்பிடல்சில் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி. கடந்த 2012 முதல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த இவர், 2015 முதல் அக்டோபர் 2019 வரை மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். அதன்பிறகு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 35 வது தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவர் தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சேர இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில், ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு கங்குலி டெல்லி அணியின் ஆலோசகராக இருந்தார் என்பது இங்கு குறிபிடத்தக்கது.
- மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா
2022 ஆண்டுக்கான டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதன் அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மேற்கொண்டது. அதன்படி, புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர். மேலும் புதிய தேர்வுக்குழுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்று வந்தது.
தற்போது புதிய தேர்வுக்குழுக்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், சேத்தன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறுகிய காலத்துக்கு அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
- "கோலி, ரோகித்தை வைத்து மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது": இந்திய முன்னாள் கேப்டன்
2023 ஐசிசி ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், 2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்துள்ளார். மேலும், அவர், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா? பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும்.
எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்" என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
- 'மன்கட்' முறையில் ரன் அவுட் செய்த ஜாம்பா… அப்பீலை மறுத்த 3வது நடுவர்- வீடியோ
பிக் பேஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141ரன்கள் எடுத்தது.
142 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
'மன்கட்' முறையில் ரன் அவுட் செய்த ஜாம்பா… அப்பீலை மறுத்த 3வது நடுவர்
இந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த எதிரணி பேட்ஸ்மேனை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால், அவரது அப்பீலை 3வது நடுவர் மறுத்தார்.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான ஆடம் சாம்பா கடைசி ஓவரில் 5-வது பந்தை வீச வந்தார். அதை அவர் பாதியிலே நிறுத்தி கிரீஸுக்கு வெளியே இருந்த எதிரணி பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்தார். அதற்காக அப்பீல் செய்த நிலையில், முடிவை எட்ட கள நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார்.
அப்போது சாம்பா தனது பவுலிங் ஆக்ஷனை முற்றிலும் முடிக்காத நிலையில் அந்த ரன்-அவுட்டை எடுத்தார். இதனால், அவுட் கொடுக்க மறுத்த மூன்றாவது நடுவர் பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அனுமதித்தார். இந்த சாம்பாவின் அணி தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
Spicy, spicy scenes at the MCG.
Not out is the call...debate away, friends! #BBL12 pic.twitter.com/N6FAjNwDO7— KFC Big Bash League (@BBL) January 3, 2023
- மகளிர் ஐபிஎல் டெண்டர் எடுக்க அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஒரு அணியை சொந்தமாக இயக்குவதற்கான உரிமைக்கான டெண்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தகுதித் தேவைகள், ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை, முன்மொழியப்பட்ட அணியின் உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட டெண்டர் செயல்முறையை நிர்வகிக்கும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 'அழைப்பில் உள்ளன. டெண்டர்' ("ITT - ஐடிடி") திரும்பப்பெற முடியாத கட்டணமான ரூ. 5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) மற்றும் பொருந்தக்கூடிய ஏதேனும் சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தியவுடன் கிடைக்கும். ஐடிடி ஆவணங்களை வாங்குவதற்கான செயல்முறை இந்த ஆவணத்தின் இணைப்பு ஏ-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜனவரி 21, 2023 வரை ஐடிடி வாங்குவதற்குக் கிடைக்கும்.
மேலும், “ஏலத்தை சமர்ப்பிக்க விரும்பும் எந்தவொரு ஆர்வமுள்ள தரப்பினரும் ஐடிடியை வாங்க வேண்டும். எவ்வாறாயினும், ஐடிடி-ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஏலத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த ஐடிடியை வாங்குவது மட்டும் எந்த நபருக்கும் ஏலம் எடுக்க உரிமை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.