scorecardresearch

களத்தில் இருந்தபடி ‘லைட்டர்’ கேட்ட ஆஸி,. வீரர்… பண்ட்-க்கு மும்பையில் அறுவை சிகிச்சை… டாப் 5 கிரிக்கெட் செய்திகள்!

பண்ட்டின் உடல்நிலை சீரடைந்து வரும் நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

களத்தில் இருந்தபடி ‘லைட்டர்’ கேட்ட ஆஸி,. வீரர்… பண்ட்-க்கு மும்பையில் அறுவை சிகிச்சை… டாப் 5 கிரிக்கெட் செய்திகள்!
Top 5 cricket tamil news

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. மைதானத்தில் இருந்தபடி லைட்டர் கேட்ட மார்னஸ் லாபுசாக்னே: வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் பூஜ்ஜிய ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

மைதானத்தில் இருந்தபடி லைட்டர் கேட்ட லாபுசாக்னே

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே மைதானத்தில் இருந்தபடி புகைப்பிடிப்பது போல சைகை காட்டி லைட்டர் கேட்டார். இதை கவனித்த வர்ணனையாளர்கள் சிரித்தபடி கமெண்ட் செய்தனர். ஆனால், அவர் ஹெல்மெட்டை சரிபார்ப்பதற்காகவே அதை கேட்டார். எனினும், அவரது சைகை சிகரெட்டை பற்ற வைக்க லைட்டர் கேட்பது போல் இருந்தது. இது ரசிகர்கள் மத்தியிலும் கலகலப்பை கொண்டு வந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  1. சூப்பர் கிங்ஸ் அகாடமி… இப்பொது திருச்சியிலும்…

ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரர்களை உருவாக்கும் வண்ணம் தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அதன் 4-வது அகாடமியை திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் தொடங்கியுள்ளது. இங்கு 8 ஆடுகளங்களுடன் மின்னொளி வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பேசிய சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், “தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் கிரிக்கெட்டுக்கான ஆர்வம் அதிகம். இந்த அகாடமியின் மூலம் பல்வேறு இளம் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியும், அனைத்து விதமான வசதிகளும் வழங்கி அவர்களின் விளையாட்டு மேம்படுத்தப்படும். இதன் மூலம் வருங்கால சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள்.” என்று கூறினார்.

இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி வருகிற ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் என்றும், இரு பாலருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. சதமடித்த சர்பராஸ் கான்… மும்பை 337 ரன்கள் முன்னிலை…

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை – தமிழ்நாடு அணிகள் மோதும் ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று (செய்யவாய் கிழமை) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. அரைசதம் அடித்த பிரதோஷ் பால் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய மும்பை அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அப்போது சர்பராஸ் கான் 22 ரன்களுடனும், ஷாம்ஸ் முலானி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Ranji Trophy | Ranji Trophy Live | Ranji Trophy Round 4

இந்த நிலையில், இன்று 2 ஆம் நாள் ஆட்ட நேரத்தில் சதம் விளாசிய சர்பராஸ் கான் 220 பந்துகளில் 19 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தனுஷ் கோட்யான் 71 ரன்களுடனும், மோஹித் அவஸ்தி 69 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன்களை குவித்துள்ளது.

தொடர்ந்து பேட்டிங் செய்ய களமாடிய தமிழக அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் (3) மற்றும் என் ஜெகதீசன் (27) களத்தில் உள்ளனர்.

  1. பண்ட்-க்கு மும்பையில் அறுவை சிகிச்சை – அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு தனது பென்ஸ் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி சென்ற நிலையில், அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பண்ட்டின் உடல்நிலை சீரடைந்து வரும் நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிஷப் பண்ட்டை மும்பைக்கு மாற்றுவது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பண்ட் , ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) மூலமாக மும்பைக்குக் அழைத்து வரப்படுகிறார். மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்படுவார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான எல்லா உதவிகளையும் ரிஷப் பந்த்துக்கு பிசிசிஐ வழங்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ‘பவர்பிளேயில் பந்துவீசி, ஆரம்பத்திலே விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் எனது இலக்கு’: சிவம் மாவி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று செவ்வாய்கிழமை (ஜனவரி 3 ஆம் தேதி) இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணியில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கேப்டன் தசுன் ஷனக (45 ரன்) மற்றும் கடைசி வரை களத்தில் இருந்த சாமிக்க கருணாரத்னே இந்தியாவிற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இலங்கையின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவரால் அந்த பந்தை பவுண்டரி விரட்ட முடியவில்லை.

தவிர, அவருடன் ஜோடியில் இருந்த டில்ஷான் மதுஷங்க ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால், வெற்றி முகம் இந்தியா பக்கம் திரும்பியது. இறுதியில் இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அறிமுக ஆட்டத்திலே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிவம் மாவி

இந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய 24 வயதான சிவம் மாவி பவர்பிளேயில் தொடக்க ஆட்டக்காரர்களான பாத்தும் நிசாங்கா (1), தனஞ்சய டி சில்வா (8) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால், ஒன்பதாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து அவர் வனிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, கேப்டன் ஹர்திக் பாண்டியா புதிய பந்தை அவரிடம் கொடுத்தபோது அவரது மனதில் என்ன தோன்றியது என்று கேட்டார். அதற்கு மாவி, “வழக்கமாக நான் எல்பிடபிள்யூ எடுக்க விரும்புவேன். அதனால் எனது முக்கிய இலக்காக பவர்பிளேயில் முதலில் தாக்குல் நடத்துவதாக இருந்தது. பவுண்டரிகள் விரட்டப்பட்டாலும், இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளைப் பெறுவதே எனது மனநிலையாக இருந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான (2018 உலகக் கோப்பை) நான் ஐபிஎல்லில் விளையாடியபோது, ​​எனக்கு காயங்கள் இருந்தன. ஆனால் எனது செயல்திறனுக்கு இடையில் நான் காயம் அடைந்ததால் எனது உடற்தகுதியை சமன் செய்ய முடிவு செய்தேன். எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைக்க முடிவு செய்தேன், அது இந்தப் போட்டியில் எனக்குப் பலனைக் கொடுத்தது.

முதல் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினம். மேலும், இது எனது முதல் தொடர். வாய்ப்பைப் பெறுவது எளிதல்ல என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கடந்த ஆறு வருடங்களாக நான் U-19 (உலகக் கோப்பை)க்குப் பிறகு காயம்பட்டபோது இந்த தருணத்திற்காகக் காத்திருந்தேன். ஆனால் நான் என்னை நம்பினேன், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் மற்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தேன்.” என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket top 5 news in tamil 04 january 2023