KS Bharat's drop catch, India vs Australia, 4th Test Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதல் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்துள்ளது. சதம் விளாசிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஈஸி கேட்ச்-ஐ மிஸ் செய்த இந்தியா
இந்த ஆட்டத்தின் 6வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். அவரது 5.4 வது பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆஃப் சைடில் விரட்ட முயன்றார். அப்போது பந்து இன்சைடு எட்ச் ஆகி விக்கெட் கீப்பர் பாரத் வசம் சீறி சென்றது. மிகவும் எளிமையாக கையை நோக்கி வந்த பந்தை பாரத் பிடித்து விட்டார், டிராவிஸ் ஹெட் 'அவுட்' என அனைவரும் நினைக்க, ஆனால், அது 'அவுட் இல்லை' என்பதை உறுதி செய்யும் விதமாக கேட்சை கோட்டை விட்டார் பாரத்.
அவர் கேட்சை தவற விட்டதை பார்த்த ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். களத்தில் இருந்த வீரர்கள் அதிர்ச்சி கலந்த எரிச்சலை வெளிப்படுத்தினர். பாரத் கேட்ச் விட்டதைப் பார்த்த கேப்டன் ரோகித் அதிர்ந்து போனார். இந்தியா ஆஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த முதல் 5 ஓவர்களாக போராடிய நிலையில், பாரத் கேட்ச்சை நழுவ விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியும் வருகிறது.
இந்த சம்பத்திற்குப் பின்னர் 16 வது ஓவரை வீசிய அஸ்வினின் 3வது பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்றார் ஹெட். அப்போது அவர் கவர் திசையில் பந்தை பறக்கவிட, அங்கு பீல்டிங் செய்த ஜடேஜா கேட்சை லாவகமாக பிடித்து அசத்தினார். 7 பவுண்டரிகளை விரட்டிய டிராவிஸ் ஹெட் 32 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil