MS Dhoni spotted driving vintage Rolls Royce in Ranchi Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது. இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்ட தோனி, அதே அளவுக்கு இரு சக்கர, மற்றும் நான்கு வாகனங்கள் மீது அளப்பரிய பிரியம் கொண்டவர். இது குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசியுள்ள அவர், உலகின் முன்னணி பைக்கள் மற்றும் பழமையான கார்களை வாங்கி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் வைத்துள்ளார்.
அந்த பெரிய கேரேஜில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் விண்டேஜ் பைக்குகள் உயர் ரக கார்கள் மற்றும் பல பழங்கால விண்டேஜ் கார்களும் உள்ளன. அதில் அவரது பிரியமான கார்களில் ஒன்று பழைய ரோல்ஸ் ராய்ஸ் சிவர் ரெய்த் 2 ஆகும். அதை அவர் சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும். ஆனால் அதனை தோனி 2021-இல் தான் வாங்கினார்.
சமீபத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் தோனியின் கேரேஜில் உள்ள கார்களின் பிரமாண்ட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து கொண்டனர். அதில் தோனியின் அனைத்து பைக்குகள் மற்றும் கார்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக வெளிவந்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தோனி ரோவர் மினி கூப்பர் ஸ்போர்ட் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 ஆகிய இரண்டு பழங்கால கார்களில் வலம் வந்துள்ளார். மேற்கூறிய கார்களைத் தவிர, தோனியிடம் போன்டியாக் ஃபயர்பேர்ட் மற்றும் ஒரு காலத்தில் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட நிசான் ஜோங்காவும் உள்ளது.
மேலும் தோனியிடம் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், கவாசாகி நின்ஜா எச்2, டுகாட்டி 1098, யமஹா ஆர்டி350, சுஸுகி ஹயபுசா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பைக்குகள் உள்ளன. மேலும் யமஹா ராஜ்டூட், யமஹா ஆர்எக்ஸ் 135, கான்ஃபே ஆர்எக்ஸ் 135, ஹெட்காட் 135 ஹெட்காட் போன்ற நம்பமுடியாத விலையுயர்ந்த மற்றும் அரிய வகை விண்டேஜ் பைக்குகளும் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil