Virat Kohli - Dinesh Karthik Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று இரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கத்தை கொடுத்த ராகுல் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடியில் கேப்டன் ரோகித் 43 ரன்களிலும், அரைசதம் அடித்த ராகுல் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் புகுந்த வீரர்களில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 61 ரன்னில் அவுட் ஆனார். விராட் கோலி 43 ரன்களும், தினேஷ் கார்த்திக் 17 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 237 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக மகராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து, 238 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி, சதம் அடித்த டேவிட் மில்லரின் ஆட்டம் வீணானது. இறுதியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2- 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தன்னலமற்ற தலைவன் கோலி
நேற்றைய ஆட்டதில், 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என மிரட்டல் அடி அடித்த சூரியகுமார் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய தினேஷ் கார்த்திக் களமிறங்கி இருந்தார். இந்த நேரத்தில் 41 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, நார்ட்ஜே வீசிய 19 வது ஓவரின் 4 மற்றும் 5 வது பந்தில் 2 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் அவர் அரைசதம் அடிக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக், ககிசோ ரபாடா வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2வது பந்தை பவுண்டரி அடித்து, 3வது பந்தை டாட் பால் விட்டார். 4வது பந்து வெட் செல்லவே, பின்னர் மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் டிகே.
5வது பந்துவீசுவதற்கு முன் இருந்த இடைவெளியில் தினேஷ் கார்த்திக், 'அடுத்த பந்தில் சிங்கிள் ஓடுவோம்' என்பதை போல் சைகை காட்டினார். ஆனால் கோலி, 'என் அரை சதம் முக்கியம் அல்ல', 'உன் அதிரடியை தொடரு' என்பதை போல் க்ரீன் சைகை காட்டினார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 5வது பந்தில் சிக்ஸர் அடித்தார். 6 பந்தை டாட் பால் விட்டிருந்தாலும் ஒரு ரன் ஓடி எடுத்தனர்.
களத்தில் எப்போதும் அணியின் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் கோலி, தினேஷ் கார்த்திக்கை நோக்கி செய்த அந்த சைகைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர்களின் உரையாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil