Ravindra Jadeja Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று இருந்த இவர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரின் போது அவரது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகினார்.
ஜடேஜாவுக்கு ஏற்பட்டட் காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஜடேஜா தனது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள்இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா, காயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் அவர், நடக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில், ஜடேஜா தனது வலது முழங்காலில் க்ரீப் பேண்டேஜுடன் நடப்பதைக் காணலாம். காயம்பட்ட காலில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இருக்க, நடைப்பயணத்தின் போது, அவர் மிகுந்த கவனத்துடன் மெது மெதுவாக அடி எடுத்து வைக்கிறார்.
சுழலில் அசத்தும் அக்சர்
முழங்கால் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் அவர் விளையாடவில்லை. இதேபோல், இன்று முதல் நடைபெறவிருக்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட்டிலும் அவர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அக்சர் பட்டேலின் எழுச்சி அணிக்கு சமபலம் கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான களமாடிய அக்சர் தனது சிறப்பான பந்துவீச்சில் அனைவரையும் கவர்ந்தார். மேலும், தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னணி விக்கெட் எடுத்தவராகவும் இருந்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil