Smriti Mandhana giving batting tips to Thailand players Tamil News: மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் வங்கதேச மண்ணில் நடந்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
சில்ஹெட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி வெறும் 37 ரன்கள் மட்டும் 15.1 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக என் கொஞ்சரோயெங்காய் 12 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து, ஆட்டத்தின் 6வது ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக சப்பினேனி மேகனா 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி தொடரில் அதன் 5 வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி-20 தொடருக்கான லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை மறுநாள் (வருகிற 13 ஆம் தேதி) அரையிறுதி போட்டிகள் நடக்கவுள்ளன. புள்ளி அடிப்படையில் இந்தியா முதல் இடத்திலும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லந்து அணிகள் 2, 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன.
தாய்லாந்து வீராங்கனைகளுக்கு பேட்டிங் டிப்ஸ் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக வலம் ஸ்மிருதி மந்தனா இந்த ஆட்டத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்தப் போட்டி அவருக்கு 100 வது சர்வதேச டி-20 போட்டியாகும். இந்த ஆட்டத்திற்கு பிறகு மந்தனா, தாய்லாந்து வீராங்கனைகளுடன் உரையாடினார். மேலும் சில பேட்டிங் டிப்ஸ்களையும் வழங்கினார். அவர் உரையாடியது வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்யும் இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதள மற்றும் இணைய பக்கங்களிலும் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil