Asia Cup 2022 Tamil News: ஆசிய கோப்பை டி-20 போட்டிகள் நாளை 27ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், தூபாயில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஆசிய கோப்பையைப் பொறுத்தவரை, 7 முறை பட்டம் வென்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்திய அதே கேப்டன் ரோகித் சர்மா இம்முறையும் அணியின் கேப்டனாக உள்ளனர். இதனால், மீண்டும் அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இந்திய அணி தூபாய் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 28-ம் தேதி அரங்கேறும் 2வது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை அதன் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதால் இருநாட்டு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு, இவ்விரு அணிகள் மோதிய டி-20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கவும் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் நலம் விசாரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷஹீன் அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆசிய தொடரில் இருந்து விளக்கியுள்ளார். இருப்பினும், அவர் ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியினருடன் பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தூபாய் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள வந்த இந்திய வீரர்கள் சாஹல், ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், விராட் கோலி உள்ளிட்டோர் அவரது உடல் நலம் குறித்து ஆறத் தழுவி விவரித்துக்கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடியை சந்திக்க வந்த பண்டிடம், “நான் உங்களைப் போல் ஒரு பேட்டராக மாற வேண்டும் என்று நினைக்கிறேன், ஒற்றைக் கையால் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்” என்று அப்ரிடி கூறுகிறார். அதற்கு புன்னகை தவழ பதிலளித்த பண்ட், “நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தால், நீங்கள் கட்டாயமாக முயற்சி செய்ய வேண்டும்.”என்றார்.
பின்னர், பண்ட் அப்ரிடியிடம் அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்று கேட்டார், அதற்கு அப்ரிடி 5 வாரங்கள் என்று கூறுகிறார். அவர்கள் பேசிய இந்த உரையாடலும் இணையத்தை வென்றுள்ளது.
Stars align ahead of the #AsiaCup2022 🤩
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2022
A high-profile meet and greet on the sidelines 👏 pic.twitter.com/c5vsNCi6xw
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil