Cricket video news in tamil: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியா முத்திரையை பதிவு செய்தவர் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 அரைசதம், 18 சதம், 3 இரட்டை சதங்களுடன் 6713 ரன்களை குவித்துள்ளார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 43.88 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 44.25 ஆகவும் உள்ளது.
இந்திய அணியில் கழற்றி விடப்பட்ட புஜாரா…
இந்திய டெஸ்ட் அணியில் தவறாமல் இடம்பிடித்து விடும் புஜாரா, கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால், அங்கு நடந்த 3 டெஸ்ட் ஆட்டங்களிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இருந்தும் புஜாராவை கழற்றி விட்டனர்.
இது டெஸ்ட் போட்டிகளில் நல்ல அனுபவம் கொண்ட புஜாராவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. அவரை முன்னாள் வீரர்கள் முதல் ‘நேற்று கிரிக்கெட் கற்றுக்கொண்டவர்கள்' வரை என அனைவரும் விமர்சத்தினர். அவரின் பேட்டிங் பாணி குறித்து ஏளனமாக பேசினர். கண்டன்ட் கிடைத்து விட்டது என பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இதனால் புஜாரா மனமுடைந்தாரோ இல்லையோ, அவரை நேசிக்கும் ரசிகர்களும், அவரைப் பிடித்தவர்களும் மனம் நொந்தனர்.
மீண்டெழுந்த இரும்புத்தூண்…
புஜாராவை நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றியது, அவரது ரசிர்களுக்கு பெரும் இடியாக விழுந்த நிலையில், அவரின் டெஸ்ட் பயணம் அவ்வளவு தான் என்றும், விரைவில் புஜாரா ஓய்வை அறிவிப்பார் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், புஜாரா, தன்னைப்பற்றி பக்கம் பக்கமாய் எழுதியவர்களுக்கும், தங்களின் மோசமான விமர்சனங்களால் துரத்திய அந்த மாமனிதர்களுக்கும் தனது சிறப்பான மட்டை சுழற்றலால் பதிலளித்து இருந்தார்.
இங்கிலாந்து கவுண்டி (உள்ளூர் டெஸ்ட் தொடர்) கிரிக்கெட் தொடரில் “சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்” அணிக்காக விளையாடி வரும் புஜாரா கடந்த ஏப்ரலில் ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்தார். அவர் அந்த அணிக்காக ஹாட்ரிக் சதம் அடித்ததை அணி வீரர்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும், புஜாரா ஹாட்ரிக் சதம் பதிவு செய்த வீடியோக்கள் சசெக்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…
இந்நிலையில், சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக லெக் ஸ்பின் வீசிய புஜாராவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
2022-ம் ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப்பின் தொடரில் சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூலை மாதம் 11-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற புஜாராவின் சசெக்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 588 ரன்கள் சேர்த்தது. புஜாரா 46 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து லீசெஸ்டர்ஷைர் முதல் இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 529 ரன்கள் எடுத்தது. இதில் கொலின் அக்கர்மேன் 167 ரன்னிலும், முல்டர் 129 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரிஷி படேல் 99 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா லெக் ஸ்பின்னராக மாறி இருந்தார். ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ள புஜாரா, முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 41.5 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது, புஜாரா சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீசியது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil