Jasprit Bumrah | India vs Pakistan: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார். இந்த நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்பின் போது மனைவியுடன் இருப்பதற்காக நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து பும்ரா விலகினார். குழந்தை பிறப்புக்கு பின்னர் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பும்ரா அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் பாகிஸ்தான் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா (56 ரன்கள்) - சுப்மன் கில் ஜோடி (58 ரன்கள்) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த விராட் கோலி - கே.எல். ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். ஆட்டத்தில் 24.1 வது ஓவர் வீசப்பட்ட போது மழை குறுக்கிட்டது. பின்னர் அந்த மழை கனமழையாக வெளுத்து வாங்கியது. ஆட்டத்தின் இறுதி நேரம் வரை மழை ஓயாமல் இருந்தது.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றும் மழை பெய்வதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
ரசிகர்கள் மனதை வென்ற ஷாகின் அஃப்ரிடி- வீடியோ
இதனிடையே, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி இந்திய அணியின் பும்ராவை நேற்று மைதானத்தில் சந்தித்தார். அப்போது அஃப்ரிடி, அண்மையில் தந்தையான பும்ராவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கினார். இதனைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த பும்ரா, அஃப்ரிடி நன்றி மேல் நன்றி கூறினார். பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர்.
இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் (முன்பு டிவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்தது. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் அஃப்ரிடி இந்தியாவின் பும்ராவுக்கு அன்புப் பரிசை அளித்து ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“