worldcup 2023 | thiruvananthapuram | south-africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று திங்கள்கிழமை நடக்கும் 7 வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் திருவனந்தபுரம் என்கிற பெயரை உச்சரிக்க கடுமையாக போராடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதே வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவரான கேரளவைச் சேர்ந்த சசி தரூரும் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் முகத்தில் சிரிப்பலையை கொண்டு வரும் அந்த வீடியோவில், தென் ஆப்பிரிக்க வீரரான ரஸ்ஸி வான் டெர் டுசென், 'நாங்கள் இப்போது திரு...வரம்...புட்னம்' என்ற பகுதியில் உள்ளோம் என்கிறார். அவரைத் தொடர்ந்து திருவனந்தபுரம் என்கிற பெயரை உச்சரிக்கும் டேவிட் மில்லர் ‘திரு...வந்தரம்...பிற்றும்’ என்கிறார். ‘தரும்...பரம்...பம்’ என்கிறார் ஹென்ரிச் கிளாசென். தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது பயிற்சி போட்டி மழையால் கைவிடப்பட்டது. இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்கா தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக அக்டோபர் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. அந்த அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களில் கேப்டன் பவுமா உட்பட 8 வீரர்கள் தங்களின் முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார்கள்.
The South African have arrived in Thiruvananthapuram ! But can they tell anyone where they are? pic.twitter.com/N9LnyVLVH9
— Shashi Tharoor (@ShashiTharoor) October 1, 2023
உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ராஸ் ரபஹாம், டாகிசோ ரபஹாம், ரஸ்ஸி வான் டெர் டுசென்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.