இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (Emerging Asia Cup 2023) தொடர் இலங்கை மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதியில் வங்கதேச ஏ அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலபரீட்ச்சை நடத்தும் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியா - வங்கதேச வீரர்கள் வார்த்தை போர்
முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தின் போது இந்தியா ஏ - வங்கதேச ஏ அணி வீரர்களுக்கு இடையே வார்த்தை போர் மூண்டது. இது தொடர்பாக வெளியாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேச ஏ அணி 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய நிலையில், 26வது ஓவரில் அந்த சம்பவம் நடந்தது. ஆஃப் ஸ்பின்னர் யுவராஜ்சிங் டோடியா வீசிய சுழற்பந்து நன்றாக சுழன்று சென்று சௌமியா சர்க்கார் பேட் மற்றும் பேட்டையைத் தாக்கி முதல் ஸ்லிப் பகுதிக்கு பறந்தது. அங்கிருந்த நிகின் ஜோஸ் அற்புதமான டைவிங் கேட்சை எடுத்து அசத்தினார். அவர் கேட்ச் எடுத்த பிறகு சத்தம்போட்டு ஆரவாரம் செய்தார். இன்னும் சில இந்திய வீரர்களுடன் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, இந்திய வீரர் ஹர்ஷித் ராணா திரும்பி சர்க்காரை வெளியேறும்படி சைகை செய்தார். அதற்கு சில அடிகள் எடுத்து வைத்து முன்னேறி வந்த ராணாவை எதிர்கொண்டார். அப்போது இருவருக்கும் வார்த்தை போர் மூண்டது. இந்த விவகாரம் மேலும் வலுவடைவதற்குள் கள நடுவர்களும், சக இந்திய வீரர்களும் குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். அதன்பிறகு, சர்க்கார் ஏன் அவுட் கொடுக்கப்பட்டது என்று கேட்க நடுவர்களிடம் நடந்து சென்றார். உறுதிப்படுத்திய பின், தலையை அசைத்தபடி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil