Ravichandran Ashwin - Dindigul Dragons vs Ba11sy Trichy - TNPL 2023 Tamil News: பொதுவாக பேட்ஸ்மேன் டி.ஆர்.எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ அல்லது அவுட் கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்துக்கு சென்று விடும். ஆனால் அஸ்வின் இந்த முடிவை ஏற்காமல் தங்களிடம் இருந்த 2 டி.ஆர்.எஸ் ரிவ்யூவில் ஒன்றை கேப்டன் என்ற முறையில் பயன்படுத்திய அஸ்வின் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கோவையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி தொடக்கம் முதல் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அல்லாடியாது. இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது.
இறுதியில், 19.1 ஓவர்களில் திருச்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆர். ராஜ் குமார் 39 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், சரவண குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 121 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி 14.5 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சிவம் சிங் 46 ரன்கள் எடுத்தார். இறுதியில், திருச்சி அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ரிவ்யூ-க்கு ரிவ்யூ எடுத்த அஸ்வின்
இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான அஸ்வின் ஆட்டத்தின் 12வது ஓவரை வீசினார். அவர் வீசிய 5வது பந்தில் திருச்சி அணியின் முக்கிய வீரரான ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அது அவுட் என களநடுவர் கையை உயர்த்தினார். ஆனால், ராஜ்குமார் டி.ஆர்.எஸ் ரிவ்யூ-க்கு 3ஆம் நடுவரிடம் அப்பீல் செய்தார்.
மூன்றாம் நடுவர் ஆராய்ந்து பார்த்ததில், பேட் தரையில் பட்ட போது பந்து பேட்டை கடந்து சென்றது தெளிவாக தெரிந்தது. அதேபோல் பந்து பேட்டிற்கு வரும் முன்பாக அல்ட்ராஎட்ஜில் அலைகளை (ஸ்னிக்கோமீட்டர்) காட்டியது. இதனால் பந்து பேட்டில் படவில்லை என்று கூறிய 3ம் நடுவர் அவுட் இல்லை என்றும், களநடுவரின் தீர்ப்பை ரீவர்ஸ் செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக பேட்ஸ்மேன் டி.ஆர்.எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ அல்லது அவுட் கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்துக்கு சென்று விடும். ஆனால் அஸ்வின் இந்த முடிவை ஏற்காமல் தங்களிடம் இருந்த 2 டி.ஆர்.எஸ் ரிவ்யூவில் ஒன்றை கேப்டன் என்ற முறையில் பயன்படுத்திய அஸ்வின் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால், அஸ்வின் ரிவ்யூ-க்கு ரிவ்யூ எடுக்கிறாரே என்று குழம்பினர். இதன்பிறகு மீண்டும் மூன்றாம் நடுவர் அதே பந்தை ரீப்ளே செய்து அவுட்டா இல்லையா என மீண்டும் பார்த்து மீண்டும் 'அவுட் இல்லை' என்றே தீர்ப்பு அளித்தார்.
அஸ்வின் விளக்கம்
இந்த போட்டிக்குப் பிறகு வர்ணனையாளர் முத்து அஸ்வினிடம், 'ஒரே பந்திற்கு ஏன் இரண்டு ரிவ்யூ' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அஸ்வின், 'டி.என்.பி.எல் தொடரில் டி.ஆர்.எஸ் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக எட்ஜ் ஆகும் போது பந்து பேட்டுக்கு வருவதற்கு முன் ஸ்னிக்கோமீட்டரில் ஸ்பைக் வந்து விடுகிறது. முடிவு சரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால், மீண்டும் ரிவ்யூ எடுத்தேன். ஒருவேளை அவர்கள் வேறு கோணத்தில் பார்ப்பார்கள் எனவும் நினைத்தேன்' என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil