Cricket viral news in tamil: கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குஷிப்படுத்தும் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் ஒருவர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 'டிக்டோக்' பக்கத்தில் இவரின் குடும்பத்தினரோடு செய்த வீடியோக்கள் ஒரு பக்கம் வைரலாக, தமிழின் முன்னணி நடிகர்களின் முகத்தை 'மார்பிங்' செய்து இவர் பதிவிட்ட வீடியோக்கள் மறுபக்கம் இணையத்தை தெறிக்க விட்டன. குறிப்பாக இவரின் புட்டா பொம்மா… புட்டா பொம்மா… வீடியோ பல மில்லியன் பார்வையார்களை கடந்தது.
சமீபத்தில், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்திய வார்னர், அணி பெரிதும் சோபிக்கததால் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு தொடர்ந்து நடந்த போட்டியில் இருந்து கழட்டி விடப்பட்டு, வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த சம்பவங்களால் வார்னர் வருத்தம் அடைந்தாரோ இல்லையோ, அவரை பின்தொடர்ந்த பல மில்லியன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஒரு மாபெரும் கேப்டனை இப்படியா செய்வது என்ற வருத்தத்தில் இருந்தனர்.
இதை பற்றியெல்லாம் துளியும் கவலை படாத வார்னர், தனது குறும்புத்தனமான வீடியோக்களால் ரசிகர்களை மீண்டும் குஷிப் படுத்த துவங்கிவிட்டார். தற்போது நடிகர் தனுஷ் நடித்த மாரி - 2 படத்தில் வரும் 'ரவுடி பேபி' பாடலை கையில் எடுத்துள்ள அவர், அதில் தனுஷ் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை மார்பிங் செய்து தூள் கிளப்பியுள்ளார். இணைய பக்கங்களில் பரவி வரும் இந்த வீடியோ, அவரது ரசிகர்களால் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)