USA Cricketer Jaskaran Malhotra Tamil News: அமெரிக்கா - பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த இரு அணிகள் மோதிய 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூ கினியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. எனவே பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த அணியின் முதல் 5 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், 6வது வீரராக களம் கண்ட ஜாஸ்கரன் மல்கோத்ரா தனி ஒருவராக போராடி அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
மிகச் சிறப்பாக ஆடிய ஜாஸ்கரன் மல்கோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் அமெரிக்க அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுமட்டுமல்லாமல், அவரது அதிரடியான ஆட்டத்தால் வரலாற்றுச் சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.
அது என்னவென்றால் இந்த ஆட்டத்தில் பபுவா நியூ கினியா அணியின் பந்துவீச்சாளர் காடி டோகா வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு மிரட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும், ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
31 வயதான ஜஸ்கரன் மல்கோத்ரா இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர். இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர். அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார்.
சர்வதேச ஒரு நாள் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள ஜஸ்கரன் மல்கோத்ராவுக்கு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வரும் நிலையில், தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் தன்னை தேர்வு செய்யாத இந்திய கிரிக்கெ ட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) வலுவான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.